அடுத்தடுத்து 150 முறை அதிர்ந்த பூமி!. பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு!. தரைமட்டமான வீடுகள்!. குப்பைகளாக காட்சியளிக்கும் கிராமங்கள்!
Earthquake: திபெத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அண்டை நாடான நேபாளம், சீனா, பூடான் நாடுகளிலும் இது பெரிதும் உணரப்பட்டது.
திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் டிங்கிரி பகுதியில், நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில், 6.8 அளவுக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, சீனவின் மண்டல பேரழிவு மீட்புத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், 7.1 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக, அமெரிக்க புவியியல் சேவை துறை தெரிவித்துள்ளது. இதில் 126 பேர் பலியாகினர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. எங்கு பார்த்தாலும் குப்பை கூளமாக காட்சியளித்தது.
பூகம்பத்தின் மையம் எவரெஸ்ட் சிகரத்திற்கு வடக்கே 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் இருந்தது. நிலநடுக்கத்தால் அண்டை நாடுகளான நேபாளம், பூடான் மற்றும் இந்தியாவிலும் கட்டிடங்கள் குலுங்கின. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நில நடுக்கத்தின் அதிர்வு, நம் நாட்டின் பீஹார் மற்றும் டில்லி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. திபெத் தீயணைப்பு மற்றும் மீட்பு நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளியில், ஷிகாட்சே நகரில் பல வீடுகள் இடிந்து விழுந்ததைக் காட்டுகிறது. மீட்புப் பணியாளர்கள் இடிந்த வீட்டின் இடிபாடுகளைத் தேடி, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
150க்கும் மேற்பட்ட அதிர்வுகள்: டிங்ரியின் கிராமங்களின் சராசரி உயரம் சுமார் 4,000 முதல் 5,000 மீட்டர்கள் (13,000–16,000 அடி) ஆகும். நிலநடுக்கத்தின் போது வலுவான அதிர்வு உணரப்பட்டது, அதன் பிறகு 4.4 ரிக்டர் அளவில் 150 க்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டன. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ, லாட்சே நகரில் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய நிலைமையைக் காட்டுகிறது, கடைகள் உடைந்து தெருக்களில் சிதறிக்கிடக்கின்றன.
சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் மூன்று நகரங்கள் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. அவர்களின் மொத்த மக்கள் தொகை சுமார் 6,900 ஆகும். இந்தநிலையில், அங்கு 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
திபெத் நிலநடுக்கத்தால் அணைகள், நீர்த்தேக்கங்கள் எதுவும் சேதமடையவில்லை என சீன அரசு தெரிவித்துள்ளது. இந்திய எல்லைக்கு அருகே திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டும் சீனாவின் திட்டம் குறித்து நிபுணர்கள் எழுப்பிய கவலையை நிலநடுக்கம் எடுத்துக்காட்டுவதாக நீர்வள அமைச்சகத்தின் அறிக்கை வந்துள்ளது. டிசம்பரில் சீனா அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தது, இது உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமாக 137 பில்லியன் டாலர்கள் செலவாகும், இது நதிக்கரை மாநிலங்களான இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் கவலைகளை எழுப்பியது.
நிலநடுக்கத்தில் அதிகமானோர் உயிரிழந்ததற்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில மணி நேரத்துக்கு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும்படி, சீன அதிபர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, மீட்பு பணிகளில், 1,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Readmore: கனடாவை ஆளப்போவது தமிழக பெண்ணா?. கனடா பாராளுமன்றத்தில் முதல் இந்திய பெண்!. யார் அந்த அனிதா ஆனந்த்?