பனிமூட்டம் அதிகமாக நிலவும் சூழலில் 19,742 ஜிபிஎஸ் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தம்...!
பனிமூட்டம் அதிகமாக நிலவும் சூழலில் ரயில்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய ஜிபிஎஸ் அடிப்படையிலான மூடுபனி பாதுகாப்பு சாதனங்களை ரயில்வே வழங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், குளிர்காலங்களில் பனிமூட்டத்தின் போது, நாட்டின் வட மாநிலங்களில் ரயில் போக்குவரத்து அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு சீரான ரயில் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, 19,742 ஜிபிஎஸ் அடிப்படையிலான மூடுபனி பாதுகாப்பு சாதனங்களை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த முன்முயற்சி, ரயில் சேவைகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும், தாமதத்தைக் குறைப்பதற்கும், ஒட்டுமொத்தப் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.
மூடுபனி பாதுகாப்பு சாதனம் என்பது ஜி.பி.எஸ் அடிப்படையிலான வழிகாட்டி சாதனமாகும். இது அடர்த்தியான மூடுபனி சூழலின் போது ரயில் ஓட்டுநர் (லோகோ பைலட்) ரயிலை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டித் தகவல்களை வழங்கும். சிக்னல், லெவல் கிராசிங் கேட், நிரந்தர வேகக் கட்டுப்பாடுகள், போன்றவை குறித்து லோகோ பைலட்டுகளுக்கு உடனடி தகவல்களை காட்சி மற்றும் குரல் வழிகாட்டுதல் அடிப்படையில் இந்த சாதனம் வழங்கும்.
ஒற்றை வழித்தடம், இரட்டை வழித்தடம், மின்மயமாக்கப்பட்ட மற்றும் மின்மயமாக்கப்படாத பிரிவுகள் என அனைத்து வகையான வழித்தடங்களுக்கும் இந்த சாதனம் ஏற்றதாகும்.