"பெண்ணிடம் மயங்கி ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்த இந்திய அதிகாரி" - தீவிரவாத தடுப்பு பிரிவு விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய நபர் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அமைப்பிற்கு இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் குறித்த முக்கிய ஆவணங்களை வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உத்திர பிரதேச மாநில தீவிரவாத தடுப்பு போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர் சமூக ஊடகங்களின் மூலம் அறிமுகமான பெண்ணிடம் மயங்கி இந்தியா வின் ராணுவங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிற்கு வழங்கியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.ஹபூரில் உள்ள ஷாமாஹியுதீன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சதேந்திர சிவால் என்ற நபரை இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானிற்கு வழங்கிய குற்றச்சாட்டில் உத்திர பிரதேச மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையின் ஆயுத அமைப்புகள் தொடர்பான ரகசிய ஆவணங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பிடம் பகிர்ந்ததாக மீரட்டில் உள்ள ஏடிஎஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் தியாகி தெரிவித்தார். சதேந்திர சிவால் கடந்த ஆண்டு முதல் பூஜா மெஹ்ரா என்ற பெயரில் சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண்ணுடன் தொடர்பில் இருந்து இந்திய ராணுவம் மற்றும் ஆயுதங்கள் பற்றிய ரகசியங்களை பாகிஸ்தானிற்கு பகிர்ந்ததாக தியாகி தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணுடன் தான் பகிர்ந்து கொண்ட ஆவணங்கள் இன்னும் தனது போனில் இருப்பதாக சிவால் கூறியுள்ளார். அவரது தொலைபேசி மற்றும் அவர் பயன்படுத்திய பிற கருவிகளின் தடயவியல் பரிசோதனை செய்யப்படுகிறது என தீவிரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் நடத்திய மின்னணு மற்றும் உடல் ரீதியான பரிசோதனையில் அந்த நபர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சதேந்திர சிவாலுடன் பழகிய பெண்ணின் சமூக வலைதள பக்கங்களும் ஐஎஸ்ஐ உழவு நிறுவனத்தால் கையாளப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு முதல் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் 'IBSA' உதவியாளராக பணியாற்றிய சிவால் சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகமான பெண்ணிடம் மயங்கி பணத்திற்காக இந்திய ராணுவம் மற்றும் ஆயுதங்களைப் பற்றிய ரகசியங்களை ஐ எஸ் ஐ அமைப்பிற்கு பகிர்ந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 121A (நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல்) மற்றும் அதிகாரப்பூர்வ இரகசிய சட்டம், 1923 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை நடைபெற்ற விசாரணையின் போது, சிவாலால் திருப்திகரமான பதில்களை அளிக்க முடியவில்லை மற்றும் அவரது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவ நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான ரகசிய தகவல்களை சிவால் பணத்திற்காக அளித்து வருவதாக ஏடிஎஸ் முன்பு கூறியது.
இந்த வழக்கு தொடர்பாக சிவால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவது தங்களுக்கு தெரியும் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த கைது சம்பவத்தை தொடர்ந்து சிவாலின் குடும்பத்தினர் அவரது சொந்த கிராமத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.