"INDIA கூட்டணியை ஆட்சி அமைக்க விட வேண்டும்..! பாஜக எதிரணியாக அமர வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி கருத்து..!
மெஜாரிட்டி இல்லாத பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க கூடாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.
ஜூன் 8ஆம் தேதி கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் மோடி பதவி ஏற்பது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பதிவிட்ட, "கடந்த 1989-90, 1998-2004 ஆகிய ஆண்டுகளில் பாஜக கூட்டணியுடன் ஆட்சி அமைத்த போது, பாஜகவுக்கு பேரிடியாக இருந்தது. 10 ஆண்டு (இந்துத்துவா) ஆட்சிக்கு பிறகு (2014-2024) இப்போது மீண்டும் ஒரு கூட்டணியுடன் மோடி பிரதமராக விரும்புகிறார். அப்படி இல்லாமல் INDIA கூட்டணியை ஆட்சியில் அமர்த்திவிட்டு, எதிர்க்கட்சியாக அமர்ந்து அந்த அரசை தூள் தூளாக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.