முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டு படுகொலை...! மகாராஷ்டிராவில் பரபரப்பு...
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜித் பவார் அணியை சேர்ந்த தலைவரும், மூன்று முறை எம்எல்ஏவாகவும் இருந்த பாபா சித்திக் நேற்று மாலை பாந்த்ரா கிழக்கில் மூன்று நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 66 வயதான சித்திக், பலத்த காயங்களுடன் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சையின் போது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 1999 முதல் 2014 வரை பாந்த்ரா மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றார்; 2004 முதல் 2008 வரை காங்கிரஸ்-என்சிபி அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றினார். 48 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது அரசியல் உறவை மாற்றிக்கொண்டு, அஜித் பவார் தலைமையிலான என்சிபியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியான அவர் திரையுலனர் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர். அவரது இஃப்தார் நிகழ்ச்சி ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் சஞ்சய் தத் உட்பட பல பிரபலங்களை ஈர்த்தது.
நவம்பரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சித்திக் கொல்லப்பட்டதை அடுத்து, மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருவது அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது ஒரு "துரதிர்ஷ்டவசமான" சம்பவம் என்று கூறிய மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவதை உறுதி செய்வோம்" என்றார்.