தொடரும் கூட்டணி சிக்கல்… தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த மற்றொரு கட்சி.! இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு.!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தேர்தல் தேதி போன்றவை அடுத்த மாதம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நாளாக கருதி பணிகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் பம்பரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றிற்கான பேச்சு வார்த்தைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் திமுக ஆம் ஆத்மி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது.
இந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி திடீரென விலகி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இதனைத் தொடர்ந்து பீகாரில் பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சியை தொடங்கினார் நித்திஷ் குமார். இது இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் மேலும் ஒரு கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு மீண்டும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லாஹ்வின் தேசிய மாநாட்டுக் கட்சி வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் தொகுதி பங்கீடு போன்றவை தாமதமாக நடைபெறுவதால் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்திருப்பதாக பாரூக் அப்துல்லாஹ் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்தில் கூட்டணி கட்சிகள் தனித்துப் போட்டியிடும் நிலையில் தற்போது காஷ்மீர் மாநிலத்திலும் தேசிய மாநாட்டு கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.