IND VS WI டி20!. சிக்ஸர் மழை!. வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ்!. தொடரை கைப்பற்றி இந்திய மகளிர் அணி அசத்தல்!.
IND VS WI டி20: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் ஆகியோரின் அபார ஆட்டத்தால், 60 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய மகளிர் அண் தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. நவி மும்பையில் 3வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீராங்கனை உமா செத்ரி (0) ஏமாற்றினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்த கேப்டன் ஸ்மிருதி மந்தனா (77), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (39) ஜோடி நம்பிக்கை தந்தது. சிக்சர் மழை பொழிந்த ரிச்சா கோஷ், 18 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 54 ரன்னில் (21 பந்து, 5 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டானார். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 217 ரன் எடுத்தது. ராகவி பிஸ்ட் (31), சஜீவன் சஞ்சனா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கியானா ஜோசப் (11) சுமாரான துவக்கம் கொடுத்தார். கேப்டன் ஹேலி மேத்யூஸ் (22), டீன்டிரா டாட்டின் (25) ஆறுதல் தந்தனர். சினெல்லே ஹென்றி (43) ஓரளவு கைகொடுத்தார். ராதா யாதவ் 'சுழலில்' ஆலியா (6), ஷபிகா (3), ஜைதா ஜேம்ஸ் (7) சிக்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அபி பிளட்சர் (5), கரிஷ்மா (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ராதா யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
அதன்படி, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் ரிச்சா கோஷ் வென்றார். தொடர் நாயகி விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (193 ரன்) கைப்பற்றினார். இதன்மூலம் பெண்கள் டி20 போட்டிகளில் அதிக 50 ரன்கள் எடுத்த பட்டியலில் ஸ்ம்ருதி மந்தனா முதலிடத்தில் உள்ளார். இதேபோல், பெண்களுக்கான டி20 போட்டிகளில் அதிவேக 50 ரன்கள்(அரைசதம்) அடித்த பட்டியலில் ரிச்சா கோஷ் (18 பந்து) முதலிடத்தில் உள்ளார்.