அதிகரிக்கும் மழைக்கால நோய்கள்!… 3 பேருக்கு மேல் காய்ச்சல் கண்டறிந்தால்!… அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
மழைக்கால காய்ச்சல், நீரினால் பரவக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று இணை சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏடிஸ்கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், மழைக்கால காய்ச்சலை தடுக்கும் வகையில், சனிக்கிழமைதோறும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, அறிகுறி இருப்பவர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவில் மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதியில், 3 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டால், அங்கு முழுமையான பரிசோதனை, கண்காணிப்பை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள், தங்களுக்கு உடல்சோர்வு, காய்ச்சல் போன்ற உபாதைகள் இருந்தால், அலட்சியம் காட்டாமல், மருத்துவர்களின் பரிந்துரைப்படி சிகிச்சைபெற வேண்டும். மழைக்கால காய்ச்சல் மற்றும் நீரினால் பரவக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று இணை சுகாதார இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.