அதிகரிக்கும் HMPV வைரஸ் பாதிப்பு…! கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் ஒரு குழந்தைக்கு பாதிப்பு உறுதி..!
கர்நாடக மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், பெங்களூரில் HMPV வைரஸின் முதல் வழக்கு பதிவாகி, இந்தியாவிற்குள் வைரஸ் நுழைந்துள்ளது மக்களை பீதி அடைய செய்துள்ளது. கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி-HMPV) எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது. HMPV வைரஸ் என்பது கொரோனா போலவே, மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். இந்த வைரஸ் குறிப்பாக, 14 வயதுக்கு குறைவான வயது கொண்டவர்களை அதிகமாக இந்த தாக்குகிறது.
இந்நிலையில் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்நாடக மாநிலமான பெங்களுருவில் 8 மாதக் குழந்தைக்கும், 3 மாத குழந்தைக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதனை ICMR உறுதிப்படுத்தியது.
மூச்சுக்குழாய் நிமோனியா பாதிப்புக்குள்ளான எட்டு மாத ஆண் குழந்தை ஜனவரி 3 அன்று பெங்களுருவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் HMPV உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குழந்தை குணமடைந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சர்வதேச பயணத்தின் வரலாறு இல்லை என்பதையும் அமைச்சகம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அதே போல் மூச்சுக்குழாய் நிமோனியா பாதிப்புடைய மூன்று மாத குழந்தைக்கும் இந்த HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தற்போது நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 2 குழந்தைகள் HMPV வைரஸால் பாதித்துள்ள நிலையில் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3வது HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தைக்கு மூச்சுக்குழாய் நிமோனியா பாதிக்கப்ட்டுள்ளதாக HMPV பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக சீனாவை மிரட்டி வந்த HMPV வைரஸ் தற்போது இந்தியாவிலும் அடியெடுத்து வைத்துள்ளது. அதுவும் ஒரே நாளில் தற்போது வரை மூன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. HMPV வைரஸ் பாதிப்பு குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) வழக்கமான தொடர்பைப் பேணுவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது.