கோவிட் 19-ஐ போலவே HMPV வைரஸும் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவுமா..? நிபுணர்கள் சொன்ன பதில்..
2019 டிசம்பரில், முதன்முதலில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனாவின் முதல் அலை பெரும்பாலும் வயதானவர்களை பாதித்தது. ஆனால் இரண்டாவது அலை, டெல்டா மாறுபாடு இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து மேல் சுவாசக் குழாயை மட்டுமே பாதிக்கும் ஒமிக்ரான் மாறுபாடு அதிக இறப்புகளுக்கு வழிவகுத்தது. ஆனால் காலப்போக்கில் பாதிப்பு குறைந்த நிலையில் நாம் வைரஸுடன் வாழ கற்றுக்கொண்டோம்.
கொரோனாவின் தாக்கத்தில் உலகம் மீண்டு வந்துள்ள நிலையில், சீனாவில் வேகமாக பரவும் மற்றொரு வைரஸ் தற்போது கவலையை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் HMPV வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் கோவிட்-19 ஒரு புதிய வைரஸாக இருந்தாலும், HMPV (Human Metapneumovirus) பல ஆண்டுகளாக இருக்கும் வைரஸ் தான். இந்தியாவிலும் கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் HMPV பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் கோவிட் 19-ஐ போலவே HMPV வைரஸும் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவுமா..? என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஸ்டார் இமேஜிங் மற்றும் பாத் லேப் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் டாக்டர் சமீர் பாட்டி இதுகுறித்து பேசிய போது "HMPV ஒரு புதிய வைரஸ் அல்ல, நீண்ட காலமாக உள்ளது. இது பொதுவாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
HMPV மிதமான அளவில் தொற்றக்கூடியது, பாதிக்கப்பட்ட நபர் இருமல் மற்றும் தும்மும்போது சுவாச துளிகள் மூலம் பரவுகிறது. காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தைப் போலவே, இது அசுத்தமான மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலமும் பரவுகிறது.
HMPV உருமாற்றம் அடைந்து மேலும் வீரியமாக மாறுமா?
கோவிட் அதன் தாக்கத்தை மாற்றியமைத்து மேலும் வீரியம் மிக்கதாக மாறியது போல, HMPV க்கும் அதே வழி இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் "SARS-COVID வைரஸால் ஏற்படும் கோவிட்-19 போலல்லாமல், HMPV ஒரே மாதிரியான பிறழ்வு மற்றும் மாறுபாடுகளைக் காட்டவில்லை. HMPV பொதுவாக தீவிரம் குறைவானது. எனவே தொற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் இல்லை. கோவிட் 19, HMPV இரண்டும் சுவாச அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.
HMPV இளம் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு சளி போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது இது தீவிரமடையும் போது நிமோனியா போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும், சில சமயங்களில் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.
எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
தொடர்ந்து பேசிய அவர் “ HMPV க்கு மட்டும் தற்போது மாஸ்க் அணிவது அவசியமில்லை. மாஸ்க் அணிவது HMPV, காய்ச்சல் மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல சுவாச வைரஸ்களிலிருந்து மக்களைத் தடுக்க உதவும். எனவே பொதுமக்கள் நெரிசலான இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக வயதானவர்கள், அடிப்படை சுகாதார பிரச்சனை உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கோவிட்-19 இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இருப்பினும், பரவலான தடுப்பூசி மற்றும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி பல பாதிப்புகளின் தீவிரத்தை குறைக்க உதவியது.” என்றும் தெரிவித்தார்.