அதிகரிக்கும் போலி ஆவணங்கள்!. இனி பத்திர நகல்களில் ஆதார் எண் அழிக்கப்படும்!. பதிவுத்துறை அதிரடி!
Aadhaar number: போலி ஆவணங்கள் தயாரிப்பதை தடுக்கும் வகையில், பதிவான பத்திரங்களின் பிரதிகளை வழங்கும் போது, ஆதார் உள்ளிட்ட அடையாள எண்களை அழித்து கொடுக்கும் பணியை பதிவுத்துறை துவக்கியுள்ளது.
சார் - பதிவாளர் அலுவலகங்களில், சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவின் போது, சம்பந்தப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக, ஆதார், பான் எண் போன்றவை பெறப்படுகின்றன. இந்த அடையாள சான்றுகளின் பிரதிகள் பத்திரத்தில் இணைக்கப்படுகின்றன. இவ்வாறு சேர்க்கப்படும் இணைப்பு பக்கங்கள் அனைத்தும், பத்திரப்பதிவுக்கு பின் ஸ்கேன் செய்யப்பட்டு, கணினியில் பதிவேற்றப்படும். இதில், அசல் பிரதி, சொத்து வாங்குவோரிடம் ஒப்படைக்கப்படும். அதில், எந்த விபரங்களும் மறைக்கப்படாது.
சொத்து வாங்கவோ, அது பற்றிய விபரத்தை தெரிந்து கொள்ளவோ, யார் வேண்டுமானாலும் சொத்தின் பதிவு நகல்களை பெற முடியும். இதற்கு விண்ணப்பிப்போருக்கு, பத்திரங்களின் பிரதிகள், 'பிடிஎப்' வடிவில், 'இ - மெயில்' வாயிலாக அனுப்பப்படும். இதில், சொத்து விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் ஆகியோரின் ஆதார், பான் எண்கள் கருப்பு மையால் கோடிட்டு அழிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. ஆதார், பான் எண் போன்றவை தனிப்பட்ட அடையாள சான்றுகள். இவற்றை பிரதி பத்திரங்கள் பெறும் மூன்றாம் நபருக்கு கொடுக்கக்கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதை மீறி கொடுத்தால், போலி ஆவணங்கள் தயாரிக்க வழி வகுத்து விடும்.
பத்திரப்பதிவு செய்வோரின் தனிப்பட்ட ரகசிய தகவல்களை, தேவையில்லாத நபர்களுக்கு தருவதை தடுக்கும் வகையில், பத்திரத்தில் இந்த விபரங்கள் அழிக்கப்படுகின்றன. சொத்து வாங்கும் நபர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்கள் பத்திரத்தின் பிரதியை வாங்கி, அதில் இந்த விபரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
Readmore: தமிழகமே..! இன்று மிலாது நபி கொண்டாட்டம்…! பள்ளி, பாஸ்போர்ட் அலுவலகம் விடுமுறை…!