’அந்த 2 நிமிஷத்துல அத்தனை பேரையும் விரட்டி பூ மாதிரி கூட்டிட்டு போனாரு’..!! நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்..!!
நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்தியளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை அவர் காலமானார்.
விஜயகாந்த்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வந்ததால் இன்று அதிகாலை சென்னை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாகர்கோவிலில் இருந்து சென்னை திரும்பினார். நேராக தீவுத்திடல் சென்ற ரஜினிகாந்த் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”நேற்று வரவேண்டியிருந்தது. ஆனால் இப்போது தான் வந்தேன். ரொம்ம மனசு கஷ்டமாக இருக்கிறது. விஜயகாந்தை பற்றி பேசவேண்டும் என்றால் எவ்வளவோ இருக்கு. நட்புக்கு இலக்கணம் கேப்டன் விஜயகாந்த் தான். ஒருமுறை பழகிவிட்டால் வாழ்க்கை முழுவதும் அதை மறக்கவே முடியாது. அவரது அன்புக்கு வந்து அடிமையாகிவிடுவார்கள்.
இதனால் தான் அவருக்காக உயிரையே கொடுக்க ரெடியா இருந்தாங்க.. இருக்கிறாங்க.. நண்பர்கள் மீதும், அரசியல்வாதிகள் மீதும் ஏன் எங்கள் மீது அவர் கோபப்படுவார். ஆனால், விஜயகாந்த் மீது யாருக்கும் கோபம் இருக்காது. ஏனென்றால், அவருடைய கோபத்துக்கு பின்னாடி சரியான காரணம் இருக்கும். காலம்தோறும் அவருடன் பழக வேண்டும் என்று மனது சொல்லும். அந்த அளவுக்கு அன்புள்ளம் கொண்டவர். கேப்டன் என்பது விஜயகாந்துக்கு சரியான பெயர்.
நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமச்சந்திராவில் சுயநலமில்லாமல் இருந்த போது அனைவரும் வந்து பார்த்து தொந்தரவாக இருந்தது. அப்போது விஜயகாந்த் அனைவரையும் ஒழுங்குபடுத்தினார். சிங்கப்பூர்- மலேசியா கலை நிகழ்ச்சிக்காக போகும் போது மலேசியாவில் அனைவரும் பேருந்தில் ஏறிவிட்டனர். நான் வர தாமதமாகிவிட்டது. பவுன்சர்களால் ஒன்றும் செய்ய முடியலை. 2 நிமிஷத்தில் அத்தனை பேரையும் விரட்டிவிட்டு என்னை பூ மாதிரி பேருந்தில் ஏற்றி உட்கார வைத்தார். கேப்டன் அவருக்கு பொருத்தமான பெயர். விஜயகாந்த் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவர்” என்று கூறினார்.