குரங்கு அம்மை குரங்குகளில் இருந்து பரவுகிறதா? நோய் பரவாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
எம்-பாக்ஸ் தொற்று என்பது 1958 இல் டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளிடையே முதலில் கண்டறியப்பட்டதால் மங்க்கி பாக்ஸ் என்று பெயரில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் உண்மையில் இந்த வைரஸ் குரங்குகளில் இயற்கையாக குடிகொண்டு வாழ்வதில்லை என்பதாலும் ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து பரவுவதால் இது போன்ற பெயரை வைத்தால் அது இன அருவருப்புத் தோற்றம் வழங்கும் என்பதால் சுருக்கமாக "எம்-பாக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது.
1970 இல் ஆப்ரிக்க நாடான காங்கோவில் முதன் முதலில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அப்போது முதலே தொடர்ந்து தற்போது பல நாடுகளிலும் தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் , சிறிய வகை பாலூட்டி இனங்களான எலிகள், அணில்களிடமும் குரங்குகளிடமும் காணப்படுகிறது. இந்த விலங்குகள் கடிப்பதாலும் பிராண்டுவதாலும் அவற்றின் மாமிசத்தை முறையாக சமைக்காமல் உண்பதாலும் மாமிசத்தை தொடுவதாலும் தொற்று மனிதர்களுக்கு பரவுகிறது. தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து ஐந்து முதல் 21 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
எப்படி பரவுகிறது?
ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு பரவும் நோயாக இருப்பதால் இது குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொற்றுக்குள்ளான நபரின் தோலோடு தோல் உரசுமாறு இருக்கும் போது தொற்று எளிதில் பரவும். மேலும் தொற்றுக்குள்ளான நபரின் எச்சில், விந்து வழியாக தொற்று பரவும். தொற்றுக்குள்ளான நபருடன் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் போது தொற்றுப் பரவும். ஒருவருக்கு அறிகுறிகள் தோன்றியதில் இருந்து உடல் முழுவதும் தோன்றிய கொப்புளம் காய்ந்து சருகாகி குணமாகும் வரை அவர் பிறருக்குத் தொற்றைப் பரப்பலாம்.
தொற்று வராமல் எப்படி தற்காத்துக் கொள்வது?
இந்தத் தொற்று குறித்த விழிப்புணர்வு அவசியம். தொற்றின் அறிகுறிகள் தோன்றுபவரை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். தொற்றுக்குள்ளானவர் இருமுவதாலும் தும்முவதாலும் தொற்று பரவும் என்பதால் முக்ககவசம் அணிய வேண்டும்.
இந்த குரங்கு அம்மை , நோய்த்தாக்குதலுக்குள்ளான நபரின் உடையை, ஆடையை அல்லது அவரது படுக்கையை , கைத்துடைக்கும் துண்டு ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமாகவோ தொடுவதன் மூலமாகவோ பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நோய் பாதிப்புடைய ஒருவர் பயன்படுத்திய ஆடைகள் , படுக்கைகள், ஆகியவை மற்றும் அவர் தொட்ட பொருட்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் போது , முகக் கவசம் அணிய வேண்டும். மேலும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கையுறைகளை பயன்படுத்த வேண்டும். சூடான நீரில் ஆடைகளை 5நிமிடத்திற்கு ஊறவைத்து பின்னர் துவைக்கலாம். குளோரின் , பிளீச் , சானிடைசரை பயன்படுத்த தேவையில்லை. சாதாரண சோப்பு கூட கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுகின்றது. துவைத்த பின்னர் கண்டிப்பாக வைரஸ்கள் இறந்துவிடும் பின்னர் அதிகமான வெயிலில் காயவைக்க வேண்டும்.
இந்தத் தொற்று அடுத்த பெருந்தொற்றாக மாறும் நிலை இருப்பின் அதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். உலக நாடுகள் முழுவதும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்தத் தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும். இத்தகைய விஷயங்களுக்காக உலக சுகாதார நிறுவனம் 2024இல் இந்தத் தொற்றுப் பரவலை அச்சுறுத்தலாக அறிவித்துள்ளது. தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்போம்.
Read more ; செம வாய்ப்பு…! விவசாயிகள் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கு இலவச சர்வீஸ்…!