திருப்பதிக்கு பெயர் போன 'லட்டு' உருவான கதை..!! இதற்கு பின்னால் இப்படி ஒரு சுவாரஸ்ய வரலாறு இருக்கா?
திருமலை வெங்கடேஸ்வரா கோயிலில் பிரியமான பிரசாதமான திருப்பதி லட்டு, தினமும் 400-500 கிலோ நெய் மற்றும் 750 கிலோ முந்திரியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த இனிப்பு உபசரிப்பு 1715 முதல் கோயிலில் பின்பற்றப்படும் சடங்குகளின் ஒரு பகுதியாகும். இந்த லட்டு ஆரம்ப காலத்தில் எப்படிதயாரிக்கப்பட்டது, அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
திருப்பதி லட்டு தயாரிக்கும் முறை
லட்டு தயாரிக்க 51 வகையான பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆலய உக்கிராண (பொருள்கள் சேமிக்கும் அறை) அறையிலிருந்து இந்த பொருள்கள் லட்டு தயாரிக்க அளிக்கப்படுகின்றன. 5,100 லட்டுகள் தயாரிக்க 185 கிலோ பசு நெய், 200 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 35 கிலோ முந்திரிப் பருப்பு, 17.5 கிலோ உலர்ந்த திராட்சை, 10 கிலோ கற்கண்டு, 5 கிலோ ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, 5,100 லட்டுகள் தயாரிக்க 852.5 கிலோ பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
திருப்பதி லட்டு உருவான் கதை :
சரித்திரக் காலம் முதல் பெருமாளுக்கு பல வகையான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டுவருகின்றன. இரண்டாம் தேவராயர் காலத்தில் நைவேத்தியங்கள் எண்ணிக்கை பலவாகப் பெருகியது. அந்தக் காலகட்டத்தில் அரசவையில் பணிபுரிந்த சேகர மல்லாண்ணன் எனும் அமைச்சர், பெருமாளின் நைவேத்தியத்துக்காகப் பல தானங்களை வழங்கினாராம்.
அந்தக் காலத்தில் திருமலையில் உணவகங்கள் அவ்வளவாக இல்லை. பிரசாதங்கள்தான் பக்தர்களின் பசியைப் போக்கும் அருமருந்தாக இருந்தன. மேலும், பக்தர்களுக்கு அளிக்கப்படும் பிரசாதம் ‘திருப்பொங்கல்’ என்று அழைக்கப்பட்டது. பின்னரே அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டன. இவற்றில் வடை தவிர வேறு எதுவும் வெகு நாள்கள் தாங்காது. மற்ற பிரசாதங்கள் கெட்டுப் போய்விடும் நிலையில் அவற்றை பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல இயலாமல் போனது. இதனால் அதிக நாள்கள் கெடாமலிருக்கும் வடைக்குத்தான் அப்போது மவுசு இருந்தது.
இதைக் கவனத்தில் கொண்ட மதராச அரசாங்கம் 1803-ம் ஆண்டிலிருந்து பிரசாதங்களை விற்பனை செய்யத் தொடங்கியது. அன்றிலிருந்து ஸ்ரீவாரி ஆலயத்தில் பிரசாத விற்பனைக் கூடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது லட்டு பிடிப்பதற்கு முன்னர் உதிரியாக இருக்கும் பூந்தி, இனிப்புப் பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த பூந்திதான் லட்டாக உருப்பெற்றது.