எந்த தானத்திற்கு என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? கருட புராணம் கூறும் பலன்கள் இதோ..
ஒருவர் கேட்க நாம் மனதார கொடை அளிப்பது தர்மம் ஆகும் ஆனால் நாமாகவே முன்வந்து ஒருவருக்கு மனதார கொடுப்பது தானம் எனப்படும். ஆகவே தர்மத்தை காட்டிலும் தானமே உயர்ந்தது. அத்தகைய தானம் அளிப்பவர் மனத்தூய்மையுடன் இருப்பது அவசியமான ஒன்றாக கருடபுராணத்தில் கருதப்படுகிறது.
தானம் கொடுப்பவர் மட்டுமல்ல தானம் பெறுபவரும் நல்ல ஒழுக்கத்துடன் வாழ்பவராக மனத்தூய்மை உடையவராக இருந்தால் தான் தானம் கொடுத்தவருக்கு பலன் கிட்டும் என்றும் கூறப்படுகிறது. எந்த வகையான தானத்திற்கு நாம் இறந்த பின்பு எத்தகைய பலன்களை அனுபவிக்க முடியும் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.
1. புண்ணியத்தில் சிறந்த புண்ணியமாக கோ தானம் கருதப்படுகிறது. கோ என்றால் பசு. பசுவை தானம் அளிப்பதன் மூலம் சிறப்பான வாழ்க்கையை சொர்கபுரியில் அனுபவிக்கலாம்.
2. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சிலர் கூறுவார்கள். அத்தகைய அன்னதானம் அளிப்பவர்கள் தாம் விரும்பிய உலகத்தில் ஒரு வருட காலம் சுகம் அனுபவிக்கலாம்.
3. நிறைமாத பசுவை ஒருவருக்கு தானம் அளிப்பதன் மூலம் வைகுண்ட வாசத்தை கட்டாயம் அனுபவிக்கலாம்.
4. ஒருவருக்கு குடையை தானமாக அளிப்பதன் மூலம் வருண லோகத்தில் ஆயிரம் ஆண்டு காலம் சுகம் அனுபவிக்கலாம்.
5. சந்திர லோகத்தில் சுகம் அனுபவிக்க நெய், கட்டில், மெத்தை, பாய், ஜமுக்காளம், தலையணை, தாமிரம் இதில் எதையாவது தானம் செய்ய வேண்டும்.
6. வாயு லோகத்தில் பத்தாயிரம் ஆண்டுகாலம் சுகம் அனுபவிக்க வஸ்திர தானம் கொடுக்க வேண்டும்.
7. அக்னி லோகத்தில் சுகம் அனுபவிக்க உடல் தானம், ரத்த தானம், கண் தானம் முதலிய தானங்களை கொடுத்திருக்க வேண்டும்.
8. இந்திரலோகத்தில் இந்திரனுக்கு நிகராக அமர்ந்து சுகங்களை அனுபவிக்க வேண்டுமெனில் ஏதேனும் திருத்தலத்திற்கு யானையை தானமாக அளித்திருக்க வேண்டும்.
9. 14 இந்திரன் காலம் வரை வருண லோகத்தில் சுகங்களை அனுபவிக்க குதிரை மற்றும் பல்லக்கு தானமாக அளித்திருக்க வேண்டும்.
10. ஒரு மன்வந்திரம் காலம் வாயு லோகத்தில் சுகங்களை அனுபவிக்க ஆலயத்திற்கு நந்தவனங்கள் கொடையாக கொடுத்திருக்க வேண்டும்.
11. மறு ஜென்மத்தில் தீர்காயுளும், அறிவாற்றலும் மிக்கவராக பிறக்க வேண்டுமெனில் நவரத்தினங்களையும், தானியங்களையும் தானமாக கொடுத்திருக்க வேண்டும்.
12. தானம் செய்யும் போது எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மனதார தானம் செய்தவர்களின் மரணம் உன்னதமாக இருக்கும். மேலும் அவர்கள் மறு பிறவி இல்லாத பெரு நிலையை அடையலாம்.
13. சூரிய லோகத்தில் சுகங்களை அனுபவிக்க நல்ல காரியங்களை மனதார விருப்பத்துடன் ஏற்று செய்திருக்க வேண்டும்.
14. சத்திய லோகத்தில் சுகங்களை அனுபவிக்க தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
15. 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகங்களை அனுபவிக்க ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுத்திருக்க வேண்டும்.
6. குபேர லோகத்தில் ஒரு காலம் வரை சுகங்களை அனுபவிக்க பொன், வெள்ளி ஆபரணங்களை தானம் கொடுத்திருக்க வேண்டும்.
17. ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் சுகங்களை அனுபவிக்க கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பண உதவி செய்து அந்த கஷ்டத்தில் இருந்து விடுவித்து இருக்க வேண்டும்.
18. ஜன லோகத்தில் நீண்டகாலம் சுகங்களை அனுபவித்து வாழ நீர் நிலைகளை உண்டாக்கி இருக்க வேண்டும் அல்லது நீர்நிலைகளை சீர்திருத்தி இருக்க வேண்டும். ஒரு குளத்தை உருவாக்கியவரை விட அதை சீர்படுத்துபவருக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.
19. தபோ லோகத்தை அடைவதற்கு தேவையான, பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பாக வளர்த்திருக்க வேண்டும்.
20. 64 ஆண்டுகள் பரமபதத்தை அடைந்து சுகமாக வாழ புராண நிகழ்ச்சிகளை குறிக்கும் சிற்பங்கள் உடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றிருக்க வேண்டும்.
Read more ; 39,924 ஓட்டுநர் உரிமம் ரத்து…! தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை…! இது தான் காரணம்…!