2023ம் ஆண்டின் கடைசி கட்டத்தில்!… நிலநடுக்கம், புயல், போர்!… பூமியை குலுங்க வைத்த நிகழ்வுகள்!…
கொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை அச்சுறுத்திவந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இயற்கைப் பேரிடர்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. உலகெங்கிலும் மற்றும் ஐரோப்பா, ஆசியா முழுவதும் உள்ள பல நாடுகள் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டன. பல நாடுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி மற்றும் புயல்களும் தாக்கின. அந்தவகையில், இந்த 2023 ஆண்டில், இயற்கை பேரிடர்களின் பட்டியலும் நீள்கிறது. அதன்படி, கடைசி கட்டத்தில் இருக்கும் 2023ம் ஆண்டில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் குறித்து இங்கே பார்க்கலாம்.
கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாடுகளை உலுக்கிப் போட்டன. இது ரிக்டர் அளவில் 7.8 மற்றும் 7.5 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி மக்களை பதைபதைக்க வைத்தன. 1000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அங்கு இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தன. நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அதேபோல் அங்கு தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கின. மீட்பு பணிகளில் ராணுவம் களமிறங்கி இரவும், பகலுமாய் மக்களை மீட்டன. இதையொட்டி துருக்கியில் 50,000-க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 8,000 பேரும் இறந்ததாகக் கூறப்படுகிறது. துருக்கியில் இதற்கு முன் 1999-ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. அந்த நிலநடுக்கம் காரணமாக 17,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு நிதியுதவி செய்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஹோட்டல்கள், பள்ளிகள், மால் வளாகம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடருகின்றன. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய 72-வயது முதியவரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பல உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காலநிலை மாற்றம் உலகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் ஐ.நா சார்பில் காலநிலை மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடுதான் COP என்று அழைக்கப்படுகிறது. COP28 எனும் பருவநிலை மாற்றம் குறித்த 28-வது உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்றது. நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற்றது.
இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் கலந்து கொண்டனர். புவி வெப்ப நிலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்டுவது குறித்து ஆராய்வதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான பல முக்கிய முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்டது. மிக முக்கியமான மாநாடாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான COP33 உச்சி மாநாட்டை 2028-ம் ஆண்டு நடத்த இந்தியா தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது சர்சதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதி அருகே கால் பதித்த முதல் நாடு இந்தியா. அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியனுக்குப் பின்னால் நிலவை அடைந்த நான்காவது நாடு இதுவாகும். இது உலகளவில் விண்வெளி ஆய்வில் சமநிலையை மறுவடிவமைக்கும் இந்தியாவின் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் என்ற விஞ்ஞானி. இவர் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ல் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், நிலவில் தரையிறங்க முடியாமல் பின்னடைவை சந்தித்தது. அதற்கான காரணங்கள் தீவிரமாக ஆராயப்பட்டன. இதையடுத்து, லேண்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீதுஷாலிமர் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. அப்போது, எதிர் திசையில் வந்த பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம்புரண்டன. இந்த கோர விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
மக்கள் தொகை எண்ணிக்கையில் இதுவரை சீனா முதலிடம் வகித்துவந்தது. தற்போது, இந்தியா முதலிடத்துக்கு நகர்ந்துள்ளது. ‘வேர்ல்டு பாப்புலேஷன் ரிவியூ’ (World Population Review) அமைப்பின் கணக்கீட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 142.78 கோடியாகவும். சீனாவின் மக்கள் தொகை 142.56 கோடியாகவும் உள்ளது. சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் 1970-களில் தொடங்கியது.
1979-ல்தான் உலகெங்கிலும் ‘ஒற்றைக் குழந்தைத் திட்டம்’ (one-child policy) அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சீனா ஒற்றைக் குழந்தைத் திட்டத்தை 2016-ல் தான் தளர்த்தியது. எல்லோரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியது இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது கண்டிப்பாக ஒரு சிக்கல்தான் என வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஹமாஸ்-இஸ்ரேல் போரில், காசா மீதான இஸ்ரேலிய போர் தொடங்கியதிலிருந்து இதுவரையில் 20,400 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் பலியாகியிருக்கின்றனர். இஸ்ரேல் போரில் குழந்தைகளும், பெண்களும் அதிகமாக கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உலக அரங்கத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிவருவது கவனிக்கத்தக்கது.
கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதனாலேயே கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ஃப்ரெடி Cyclone Freddy என்ற சூறாவளி புயலால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். 1,400 க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்திய இந்த சூறாவளி, தீவிர வெப்பமண்டல சூறாவளி என்று கூறப்படுகிறது.
பசிபிக் கடலில் உருவான மிக தீவிர புயலான ஹிலாரி, அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மாநிலங்களை கடுமையாக பாதித்தது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி மிக தீவிர புயலாக மாறிய ஹிலாரி 235 கி.மீ வேகத்தில் மெக்சிகோ மற்றும் கலிபோர்னியா மாகணங்களை கடுமையாக தாக்கியது. இதனால் கலிபோர்னியாவில் இதுவரை காணாத அளவிற்கு கனமழை பெய்தது. இதில் கலிபோர்னியாவின் சான் டியாகோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த புயலால் அமெரிக்காவில் ஏற்பட்ட சேதம் மட்டும் 675 மில்லியன் டாலர் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகள் இதுபோன்ற பெரிய அளவிலான மழையை கண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வனுவாடு பகுதிகளை கேப்ரியல் புயல் பிப்ரவரி மாதம் கடுமையாக தாக்கியது. இந்த புயலின் தீவிரத்தினால் நியூசிலாந்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து வரலாற்றில் மூன்றாம் முறையாக இந்த புயலுக்காக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 40 வருடங்களுக்கு பின்பு இதுபோன்ற பெரிய புயலை சந்திக்கும் நியூசிலாந்து, 7 நாட்கள் அதாவது பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 17 வரை கனமழையும், வெள்ளத்தையும் சந்தித்தது. இந்த புயலினால் ஏற்பட்ட பாதிப்பு சுமார் 8.4 பில்லியன் அமெரிக்க டாலராக கணக்கிடப்பட்டது.
வடக்கு இந்திய பெருங்கடலில் உருவான மோக்கா புயல் மியான்மர், வங்கதேசம், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் மற்றும் சீனாவின் தெற்கு பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மியான்மர் மற்றும் வங்கதேசம் நாடுகள் பெரும் பாதிப்பை கண்டனர். இந்த புயலின் தாக்கத்தினால் 460 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. மேலும், 700 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சுமார் 2 லட்சம் கட்டிடங்கள் இடிந்து தரமட்டமானது. கனமழை காரணத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.
இந்தாண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி பாகிஸ்தானில் முகம்மது நபியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் மனித வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 52 பேர் உயிரிழந்தனர், சுமார் 70 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்தாண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி நேபாளத்தை 6.4 ரிக்டர் அளவைகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் 157 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மேற்கு நேபாளத்தில் அமைந்துள்ள ஜாஜர்கோட் மற்றும் ருக்கும் பகுதிகளை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தின் தாக்கத்திற்கு பின்பும் 159 அதிர்வுகள் பதிவானதாக தேசிய நிலநடுக்க கண்கணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. 9,000 பேர் உயிரிழந்த 2015 நிலநடுக்கத்திற்கு பின்பு நேபாளத்தில் ஏற்பட்ட மிகபெரிய நிலநடுக்கமாக இது கூறப்படுகிறது.