For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழக அரசு பணிக்கான தகுதியில் இந்தி.. இணை இயக்குநர் பணியிடை நீக்கம்..!! - அமைச்சர் கீதாஜீவன்

In social welfare department recruitment notification required educational qualification is wrongly uploaded as Hindi. Following this controversy, Minister Geethajeevan has given an explanation
04:31 PM Nov 04, 2024 IST | Mari Thangam
தமிழக அரசு பணிக்கான தகுதியில்  இந்தி   இணை இயக்குநர் பணியிடை நீக்கம்       அமைச்சர் கீதாஜீவன்
Advertisement

சமூகநலத்துறையின் பெண்களுக்கான கட்டுப்பாட்டு மைய பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அவ்விளம்பரம் நீக்கப்பட்டு தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், 'மகளிர் உதவி எண் 181 சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண் 181 பணியிடத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட tn.gov.in என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் 'அழைப்பு ஏற்பாளர்' (Call Responders) என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்துக்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் தமிழக முதல்வர் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம், மத்திய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றுக்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து, திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டது தான் திமுக வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல் அரசு.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை. தமிழக முதல்வர் ஆட்சியில், தமிழ் மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள் தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்.' என்று அவர் கூறியுள்ளார்.

Read more ; நண்பனின் மனைவி மீது ஆசை..!! கட்சியின் பெயரை சொல்லி சேட்டை..!! கடைசியில் கம்பி எண்ணும் பின்னணி..!!

Tags :
Advertisement