அதிர்ச்சி!! ஐஐடி பட்டதாரிகளுக்கே இந்த நிலையா..? வேலை வாய்ப்புகள் எங்கே? - ஆய்வில் வெளியான தகவல்
மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஆள் சேர்ப்பு குறைந்ததன் எதிரொலியாக, ஐஐடி பட்டதாரிகள் லட்சக்கணக்கில் மாத வருவாயுடன், பணிவாய்ப்பு பெறுவது 2024ஆம் ஆண்டில் சரிந்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
டெலோய்டி மற்றும் டீம்லீஸ் இணைந்து நடத்திய ஆய்வில், 2024ஆம் ஆண்டு ஐஐடி பட்டதாரிகள் ஆண்டு வருவாய் ரூ.15 - 16 லட்சத்தில்தான் இருந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு ஐஐடி பட்டதாரிகள் ஆண்டு வருவாய் ரூ.18-20 லட்சத்தில் பெற்ற பணி வாய்ப்பு, தற்போது 2024ஆம் ஆண்டில் ரூ.15-16 லட்சமாகக் குறைந்திருக்கிறது.
வழக்கமாக நடைபெறும் வளாகத் தேர்வு மற்றும் நேர்காணல்கள் குறுகிய காலத்தில் நடைபெற்று முடியும், ஆனால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு நீண்டகாலமாக வளாகத் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. புதிதாகத் தொடங்கப்பட்ட ஐஐடிகளின் நிலையும் இதுவாகவே இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. அது மட்டுமல்ல, ஆண்டு வருவாய் சராசரி குறைந்திருப்பதோடு, இந்த ஆண்டு, வளாகத் தேர்வு மூலம் பணிவாய்ப்பு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது
இது குறித்து ஐஐடிகள் தரப்பில் கூறுகையில், இந்த ஆண்டு மிகப்பெரிய முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் பலவும் வளாகத்தேர்வுக்கு வரவில்லை என்றும், சில நிறுவனங்களே அதுவும் குறைவான ஊதியத்துடன் தான் பங்கேற்றன என்று விளக்கம் அளித்துள்ளன.
ஆண்டு வருவாய் ரூ.1 முதல் 2 கோடி வரை பணி வாய்ப்புப் பெற்றுவந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.10 லட்சத்துக்கும் குறைவான பணி வாய்ப்புகளை கூட ஐஐடி பட்டதாரிகள் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாகவும், ஒரு சிலர் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் பணி வாய்ப்புகளை பெற்றுக்கொண்டதகாவும் கூறப்படுகிறது.