நீதி வேண்டும்.. நீதி வேண்டும்.. மணிப்பூருக்கு நீதி வேண்டும்!! - மோடி பேசுகையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!
மக்களவையில் பிரதமர் மோடி பேசத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சிகள் கடும் முழக்கங்களை எழுப்பினர். மணிப்பூர் விஷயத்துக்கு நீதி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.
18-வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் பின்னர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது இந்து, நீட் தேர்வு, முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்நிலையில், ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று (ஜூலை 2) மக்களவையில் பதிலுரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், சமாதான அரசியலை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஆட்சி அரசியலை அறிமுகப்படுத்தியதாகக் கூறினார். ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில், ‘இந்தியா முதலில்’ என்ற வழிகாட்டுதலால் மட்டுமே நாங்கள் வலுவான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளோம்,” என்று மக்களவையில் பிரதமர் மோடி கூறினார். இந்த மிகப்பெரிய தேர்தல் பயிற்சியில் மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மோடி பேசத் தொடங்கியதும் பாஜக எம்.பிக்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர். உடனே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு கடும் அமளியில் ஈடுபட்டுனர். உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, “ மூன்றாவது முறையாக தேசத்தின் மக்கள் எங்களுக்கு வாக்களித்து எங்களை தேர்வு செய்திருக்கிறார்கள். நாங்கள் எப்படி திறம்பட பணியற்றினோம் என்று மக்களுக்குத் தெரியும்.
தேசத்தின் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களித்துள்ளார்கள். ஏழைகள் நலனுக்காக நாங்கள் செயல்பட்டதற்கு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றுவது கண்கூடாகத் தெரிகிறது. 10 ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது” என பேசினார்.
தொடர்ந்து, அமளிக்கு இடையே மோடி தனது உரையை தொடங்கிய நிலையிலும், எதிர்க்கட்சியினர் அமைதி காக்காமல் தொடர் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளை அவைத் தலைவர் ஓம் பிர்லா கடுமையாக கண்டித்தும் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மணிப்பூருக்கு நீதி வேண்டுமென்றும் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
பிரதமர் மோடியின் உரையின் போது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்களை வெல் ஆஃப் ஹவுஸ்க்குள் நுழையுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.