தொடர்ந்து சீரழிக்கப்படும் கல்லூரி மாணவிகள்!!! பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு கூட பயப்படுகின்றனர். இந்நிலையில், தற்போது ஐஐடி மாணவி ஒருவருக்கு நடந்துள்ள சம்பவம் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம், சென்னை ஐஐடி-யில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை யொட்டி அவர் கோட்டூர்புரத்தில் உள்ள பேக்கரியுடன் இணைந்த டீ கடைக்கு, உடன் படித்து வரும் நண்பருடன் சென்றுள்ளார். அந்த டீ கடையில், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், டீ கடையில் வேலை செய்த ஸ்ரீராமை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீராம் என்பவருக்கு, சென்னை ஐஐடி-யுடன் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
இவை அனைத்தையும் செய்தியாகப் படித்துவிட்டுக் கடந்துவிடக் கூடிய அளவில் தான் நாம் இருக்கிறோம். காரணம் இவையெல்லாம் எங்கோ, யாருக்கோ நடந்தவைதானே. நீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் ஏதோவொரு மூலையில் ஒரு பெண்ணோ, பல பெண்களோ வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். எல்லாம் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்று நாம் ஒதுங்கக் கூடாது. தனிமனித ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பதில் வீடும் சமூகமும் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றது. வீட்டுக்குள் காட்டப்படுகிற பாலினப் பாகுபாடுதான் அனைத்துக்கும் மூல காரணமாக இருக்கிறது. ஆணைப் போற்றி வளர்க்கிற பெற்றோர், பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டியவள் என்கிற நஞ்சையும் ஊட்டி வளர்க்கிறார்கள்.
அதனால் தான் பெரும்பாலான ஆண்கள், பெண்களைச் சக உயிராக நடத்துவதில்லை. ஆளப் பிறந்தவன் ஆண், அவனுக்கு அடங்கி நடக்க வேண்டியவள் பெண் என திரும்பத் திரும்பப் போதித்து வளர்க்கப்படும் ஆண்களால் தான் இந்தச் சமூகம் நிறைந்திருக்கிறது. இதெல்லாம் ஒரு விஷயமா என்று நாம் புறக்கணிக்கலாம். ஆனால் உண்மையில் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகிற வன்முறையின் ஆணிவேர் இந்தப் பாகுபாடுதான்.