சூப்பர்..! உங்களிடம் 5 ஏக்கர் குறைவாக நிலம் இருந்தால் ரூ.15,000 பெறலாம்...! எப்படி தெரியுமா...?
விவசாயத்திற்கு பழைய, திறன்குறைந்த மின் மோட்டார் பம்புசெட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்சாரப் பயன்பாடு அதிகமாவதோடு. பாசன நேரமும் அதிகரிக்கிறது. சாகுபடிக்கான செலவு அதிகரித்துவரும் வேளையில், சிறு, குறு விவசாயிகள் இத்தகைய பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றுவதற்குத் தயங்குகிறார்கள். இத்தகைய விவசாயிகளின் நலனுக்காக, மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக, புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகளை விவசாயிகள் வாங்குவதற்கான மானியம் தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மானியம் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் விபரம் தெரிவித்து புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்கும் பொழுது அதன் மொத்த தொகையில் 50% அல்லது ரூ.15,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள். தங்களது திறன்குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அங்கீகாரம் பெற்ற நிறுவன மாடல்களிலிருந்து, தங்களுக்கு விருப்பமான நான்கு ஸ்டார் தரத்திற்குக் குறையாமல் உள்ள மின்மோட்டாரை விவசாயிகள் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், ஏற்கனவே தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர்ப் பாசன அமைப்பு நிறுவியுள்ள விவசாயிகள் மற்றும் நுண்ணீர்ப் பாசன அமைப்பு நிறுவிட விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ளவர்கள்.