சிறு பிழைகள் இருந்தால் பத்திர தாக்கலை அலைக்கழிக்கக் கூடாது!… பதிவுத்துறை அதிரடி!
Registration: சிறு பிழைகள் இருக்கிறது என்று கூறி, பத்திரத்தை தாக்கல் செய்தவரை அலைக்கழிக்கக் கூடாது என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
சொத்து விற்பனை பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் உரிய முறையில் தாக்கல் செய்கின்றனர். இதில், கூடுதல் தகவல், சரிபார்ப்பு தேவை எனில், அது தொடர்பான பத்திரங்கள் பதிவான, வேறு சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, சார் - பதிவாளர் உறுதி செய்ய வேண்டும். இது பற்றிய விபரங்களை, பத்திரத்தை தாக்கல் செய்தவர்களுக்கு தெரிவிப்பது இல்லை.
சமீபத்தில் ஒரு வங்கி சார்பில், சொத்து விற்பனை சான்றிதழை, ஏற்கனவே உள்ள சொத்து ஆவணங்களுடன் இணைக்கும்படி, சார் - பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சார் - பதிவாளர் அதை இணைக்காமல், அது வேறு எல்லையில் வருகிறது என்று, வேறு அலுவலகத்துக்கு அனுப்பி விட்டார். இந்த விபரத்தை வங்கி மற்றும் சொத்து உரிமையாளருக்கும் தெரிவிக்கவில்லை. அதனால், குறிப்பிட்ட சொத்து விற்பனை சான்றிதழ், எங்கு சென்றது என தெரியாத நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில், பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இந்தநிலையில், சொத்து பரிவர்த்தனைக்காக வரும் பத்திரங்களின் சரிபார்ப்பு நிலவரத்தை, அதை வாங்குவோர் தெரிந்து கொள்ள வேண்டும். பத்திரங்கள் தொடர்பான அனைத்து கடித போக்குவரத்தையும், சார் - பதிவாளர்கள், சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சிறு பிழைகள் இருக்கிறது என்று கூறி, பத்திரத்தை தாக்கல் செய்தவரை அலைக்கழிக்கக் கூடாது. இந்த வழிகாட்டுதல்களை, சார் - பதிவாளர்கள் முறையாக கடைப்பிடிப்பதை, மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார் .
Readmore: 10ம் வகுப்பில் தோல்வியா?… இன்றுமுதல் பயிற்சி வகுப்புகள் வாராந்திர தேர்வுகள்!… உதவி எண் அறிவிப்பு!