3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால்..!! குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க..!!
கோவை மாவட்டத்தில் மழை பொழிவு அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில், பாக்டீரியா பரவல் காரணமாகவும், பருவநிலை மாற்றம் காரணமாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், ”பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் காரணமாகக் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். கோவை அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை தற்போது வரை அதிகமான காய்ச்சல் நோயாளிகள் வரவில்லை. இனி வரும் நாட்களில் தற்போது வரும் நோயாளிகளை விட ஒன்றோ, இரண்டு சதவீதம் அதிகமாக வரலாம். இந்த பருவமழை காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
மேலும், தற்போது வரும் காய்ச்சல் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் என்பதால் குழந்தைகளைப் பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். பாக்டீரியா மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் இருந்தும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு காரணமாகவும் வரும் காய்ச்சலைப் பார்த்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மூன்று, நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.