"உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்"..!! உடைக்கப்படும் சென்னையின் 40 ஆண்டுகால அடையாளம்..!!
உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என அந்தக் காலத்திலேயே 4 திரையரங்குகளைக் கொண்டிருந்தது உதயம் காம்ப்ளக்ஸ். சினிமா ரசிகர்களின் வருமானத்திற்கு தகுந்த பொழுது போக்கு மையமாக மல்டிபிளக்ஸ் அனுபவத்தைக் கொடுத்ததும் இதுதான். இந்த திரையரங்கம் 'புஸ்பா 2' படத்துடன் தனது 40 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொள்கிறது. பிப்ரவரி 14ஆம் தேதியான காதலர் தினத்திற்குப் இந்த தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடங்க உள்ளன.
இங்கு முதன்முதலாக 1983இல் ரஜினியின் 'சிவப்பு சூரியன்' திரைப்படம் வெளியானது. இரண்டாவது 'சட்டம்'. பின்னர் வரிசையாக ஆயிரக்கணக்கான படங்கள் வெள்ளிவிழாவைக் கொண்டாடி உள்ளன. காதலுக்கு மரியாதை, தளபதி, நாட்டாமை, படையப்பா, அவ்வை சண்முகி, கில்லி என பல படங்கள் 200 நாட்களை கடந்து ஓடியுள்ளன. இதில் 'படிக்காதவன்', 'சந்திரமுகி' ஆகிய படங்கள் 275 நாட்கள் ஓடி சாதனைப் படைத்துள்ளன.
1979இல் இந்த மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸை கட்டத் தொடங்கி 1983இல் இருந்து இயங்க ஆரம்பித்தது. இதன் உரிமையாளர்கள் மொத்தம் 6 பேர். இவர்கள் அனைவருமே அண்ணன் தம்பிகள் என்று கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் சில தியேட்டர்களில்தான் 70 எம்.எம். திரை வசதி இருந்தது. அதில் உதயமும் ஒன்று. சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இந்த தியேட்டர் தொடங்கப்பட்ட போது இந்தப் பகுதிக்கு பேருந்து வசதியே கிடையாது.
இரவு படம் பார்த்துவிட்டுச் செல்பவர்களுக்காகத் தனியாகப் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது. அந்தளவுக்கு ஒதுக்குப் புறமாக இருந்த அசோக் நகர், இன்று ஹாட் ஆஃப் த சிட்டியாக மாறியுள்ளது. முதன்முதலாக 2 ரூபாய் டிக்கெட் விலையுடன் தொடங்கி படிப்படியாக இப்போது அதிகபட்சமாக 105 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த திரையரங்கம் முழுவதும் ஏசி வசதி கொண்டது. கடந்த 5 ஆண்டுகளாகவே இந்த 4 தியேட்டர்களிலும் மக்கள் கூட்டம் குறைய தொடங்கிவிட்டது. இதே தியேட்டரின் அருகில் இருந்த ஸ்ரீநிவாசாவும் இடிக்கப்பட்ட நிலையில், காசி மட்டுமே இங்கே இயங்கி வருகிறது.
Read More : ஈரோடு தேர்தல் எதிரொலி..!! அரசியல் தலைவர்களின் சிலைகள் மூடல்..!! மேயர் அலுவலகங்களுக்கு சீல்வைப்பு..!!