தோனியிடம் பேசி 10 வருஷம் ஆச்சு.. காரணம் இது தான்.. ஹர்பஜன் சிங் ஆதங்கம்..!!
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் மேட்ச் வின்னிங் காம்போவாக இருந்தவர்கள் ஹர்பஜன் சிங்கும் எம் எஸ் தோனியும். ஒரு ஸ்பின்னருக்கு, சரியான விக்கெட் கீப்பர் அமைந்தால், அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அப்படித்தான் இருவரின் காம்போ இருந்தது. . 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கோப்பைகளை ஒன்றாக வென்ற இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் பேசவில்லையாம்.
இதுகுறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹர்பஜன் சிங், 'தோனியுடன் நான் பேசுவதே இல்லை. கடைசியாக நாங்கள் ஐ.பி.எல் இல் சென்னை அணிக்காக ஆடியபோது பேசிக்கொண்டோம். அதுவும் மைதானத்தில் போட்டி நிமித்தமாகத்தான் பேசிக்கொள்வோம். மற்றபடி அவரும் என் அறைக்கு வரமாட்டார். நானும் அவரின் அறைக்கு செல்லமாட்டேன். நானும் அவரும் சரியாக பேசியே 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கு எந்த காரணமும் இல்லை. அவருக்கு எதிராகவும் நான் நிற்கவில்லை. ஆனால், அதற்காக நானாக அவருக்கு தொடர்புகொண்டும் பேசவில்லை.
நான் அழைத்தால் யார் போனை எடுத்து பேசுவார்களோ அவர்களை மட்டும்தான் நான் அழைப்பேன். நாம் மீண்டும் மீண்டும் அழைத்தும் எந்த பதிலும் இல்லையெனில் அதில் எந்த அர்த்தமும் இல்லை. என்னுடன் நண்பர்களாக இருப்பவர்களிடம் மட்டுமே நான் தொடர்பில் இருக்கிறேன். ஒரு நட்புறவில் நாம் ஒருவரை மதித்து நடத்தினால் அவரும் நம்மை மதிக்க வேண்டும். இருவருக்கும் பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டும்.' எனப் பேசியிருக்கிறார். இதன்மூலம், மகேந்திரசிங் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் இருவருக்கும் இடையில், பெரியதாக ஏதோ நடந்திருப்பதாக தெரிகிறது. ஆனால், ஹர்பஜன் சிங் அதனை வெளியே சொல்ல மறுக்கிறார் எனக் கருதப்படுகிறது.
Read more ; அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல.. குடும்ப அட்டைக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்..!! – அன்புமணி ராமதாஸ்