வி.சி.க-வில் இருந்த செல்வப்பெருந்தகை... காங்கிரஸ் தலைவரானது எப்படி தெரியுமா...?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்து மிக முக்கிய தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை, கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது மங்களூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விசிகவிலிருந்து விலகி 2008-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த செல்வப்பெருந்தகை, அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
பின்னர் 2010-ம்ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த செல்வபெருந்தகை, 2011-ம்ஆண்டு செங்கம் சட்டப்பேரவை தொகுதியிலும், 2016 சட்டப்பேரவை தேர்தலில் பெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே நியமனம் செய்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியின் பணியை கட்சித் தலைமை வெகுவாகப் பாராட்டுகிறது. மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக எஸ்.ராஜேஷ்குமாரை நியமனம் செய்வதற்கும் அகில இந்திய தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.