”இதெல்லாம் எப்படி வந்துச்சு”..? ”சொல்லுங்க சொல்லுங்க”..!! அமைச்சர் பொன்முடியிடம் கிடுக்குப்புடி விசாரணை..!!
சென்னையில் கிரீம்ஸ் ரோடு சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி ஆஜராகியுள்ளார்.
திமுக ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, அவரது மகன் கௌதம் சிகாமணியுடன் இணைந்து அரசுக்கு ரூ.25.7 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும், இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, அமைச்சர் பொன்முடி அவரது மகன் எம்.பி. கௌதம் சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, கணக்கில் காட்டப்படாத ரூ.81 லட்சம் ரொக்கம், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது வங்கி கணக்கில் வைத்திருந்த ரூ.41 கோடியை முடக்கினர். இந்த சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறையினர், அமைச்சர் பொன்முடியை சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை அடிப்படையாக வைத்து அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதனடிப்படையில், இன்று காலை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். அவரிடம் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.