கடும் வெயில்!… தமிழகத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!… ஐஸ் விற்ற இளைஞர் பலி!… நாட்டில் 75 பேர் பலி!
Heat: கடும் வெயில் காரணமாக ராமநாதபுரத்தில் ஐஸ் விற்ற இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் இதுவரை 75 பேர் பலியாகியுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலவும் வெப்ப அலையின் தாக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, அவசியமின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. கடும் வெப்ப அலை வீசும் பல மாநிலங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டது.
இந்தநிலையில், தமிழகத்தில் வெயில் காரணமாக பலியாவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெயில் காரணமாக சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழந்த நிலையில் தற்போது ராமேஸ்வரத்தில் ஐஸ் விற்பனை செய்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், என்சிடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் வெப்பத் தாக்குதலுக்கு 75 பேர் பலியாகி உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும் கூறப்படும் சூழலில், மாநிலங்கள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் தரவுகள் வெளிவந்துள்ளன.
நாட்டில் மே மாதத்தில் 46 பேர் பலியாகி உள்ளனர். எனினும், வெப்பத் தாக்கத்தின் பாதிப்பு எண்ணிக்கை 1,918 ஆக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இதேபோன்று மாநிலங்கள் பகிர்ந்த தகவலின்படி 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மார்ச் 1ஆம் தேதியில் இருந்து இதுவரை மொத்தம் பதிவான வெப்ப தாக்க எண்ணிக்கை 24,849 ஆக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது
எனினும், உத்தரப்பிரதேசத்தில் 166 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் பீகாரில் 22 பேர் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளனர் எனவும் மாநிலத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியப் பிரதேசத்தில் அதிக அளவாக 14 பேரும் மகாராஷ்டிரத்தில்11 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை அதிகளவில் இருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.