தமிழ்நாட்டின் ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும்..!! இல்லையென்றால்..!! மிரட்டல் விடுக்கும் வாட்டாள் நாகராஜ்..!!
ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்காவிட்டால், பெங்களூருவில் இருந்து நீட்டிக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவளி வாட்டாளர் பக்சா கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 1ஆம் தேதி தமிழக - கர்நாடகா எல்லையில் வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தினார். இதையடுத்து, வாட்டாள் நாகராஜ் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கைக்கு முன்பாக அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார்.
இதுதொடர்பாக வாட்டாள் நாகராஜ், ”ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு தான், மெட்ரோ ரயில் திட்டத்தை பெங்களூருவில் இருந்து ஒசூர் வரை நீட்டிக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு அங்குலம் கூட நீட்டிக்க அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசு அனுமதி தராவிட்டாலும், மாநில அரசு அணையை கட்ட நிதி ஒதுக்காவிட்டாலும் கூட மக்களை திரட்டி நாங்களே கட்டுமான பணியில் ஈடுபடுவோம்” என எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அங்கமாக உள்ள ஓசூர் மற்றும் ஊட்டியை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் சொல்வது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் அவர் இந்த கருத்தை கூறியிருக்கிறார். குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு எதிராக தமிழக - கர்நாடகா எல்லையான அத்தப்பள்ளியில் போராட்டம் நடத்தும் போதெல்லாம் இந்த கருத்தை அவர் முன்வைத்து வருகிறார். அந்த வகையில், பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூர் வரை நீட்டிப்பு செய்யும் போராட்டத்திலும் வாட்டாள் நாகராஜ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
Read More : மின் கணக்கீடு செய்யும் பணியில் வந்தது அதிரடி மாற்றம்..!! புதிய முன்னெடுப்பை எடுத்த மின்சார வாரியம்..!!