For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கவுரவ பணியாளர் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும்...!

Honorary pay should be increased to Rs.50,000
06:05 AM Jul 22, 2024 IST | Vignesh
கவுரவ பணியாளர் ஊதியத்தை ரூ 50 000 ஆக உயர்த்த வேண்டும்
Advertisement

கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் கலை & அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊதியம் மதிப்பூதியம் அல்ல... அவமதிப்பூதியம் என்றும், உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப் படும் அவர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய தமிழக அரசு, வழக்கமாக வழங்க வேண்டிய ஊதியத்தைக் கூட கடந்த 3 மாதங்களாக வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.20,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 28.01.2019ஆம் நாள் ஆணையிட்டது. அதை தமிழக அரசு செயல்படுத்தாத நிலையில், அந்த நாளில் இருந்து பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆணைப்படி ஊதியத்தை உயர்த்தி வழங்க ஆணையிட வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டிய தமிழக அரசு, அவர்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய ஊதியத்தையே கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை. கவுரவ விரிவுரையாளர்கள் ஆண்டு முழுவதும் பணியாற்றினாலும், அவர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும். மே மாதத்திற்கு ஊதியம் கிடையாது. ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்திற்கு கூட, புதிய நிதியாண்டு பிறந்த பிறகு தான் நிதி ஒதுக்கப்படும் என்பதால் அந்த ஊதியம் ஜூன் மாதத்தில் தான் வழங்கப்படும். ஆனால், நடப்பாண்டில் ஜூலை மாதம் நிறைவடையவிருக்கும் நிலையில், இப்போது வரை மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.

கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய நிலுவை ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகிக் கொண்டே செல்கிறது. கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை அவர்கள் பணி செய்த மாதத்தின் கடைசி நாளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதை செய்யத் தமிழக அரசு தயாராக இல்லை. மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்டுபவர்களால் 3 மாதங்களாக ஊதியமின்றி எவ்வாறு வாழ்க்கையை நடத்த முடியும்? என்ற புரிதல் ஆட்சியாளர்களுக்கு இருந்தால் ஊதியத்தை உடனே வழங்கியிருப்பர்; ஆனால், அவர்களுக்கு அந்தப் புரிதல் சிறிதும் இல்லை.

இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரூ.20 ஆயிரம் என்ற நிலையை எட்டியது. அதையும் ஆண்டுக்கு ஒரு மாதம் வழங்க மறுப்பதும், மாதக் கணக்கில் நிலுவை வைப்பதும் நியாயமல்ல. தமிழக அரசே கவுரவ விரிவுரையாளர்களின் உழைப்பைச் சுரண்டக் கூடாது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் சமூகநீதியை வழங்கும் வகையில், அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement