இந்தியாவில் பரவியது HMPV வைரஸ்.. பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு பாசிட்டிவ்..!! - ICMR உறுதி
சீனாவில் HMPV வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள 8 மாதக் குழந்தைக்கும், 3 மாத குழந்தைக்கும் HMPV பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், பெங்களூரில் HMPV வைரஸின் முதல் வழக்கு பதிவாகி, இந்தியாவிற்குள் வைரஸ் நுழைந்துள்ளது மக்களை பீதி அடைய செய்துள்ளது. கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி-HMPV) எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது.
சிறுவர்களே இந்த தொற்று பாதிப்பிற்கு அதிகம் ஆளாகிவரும் நிலையில், பெங்களூரில் 8 மாதக் குழந்தைக்கும் 3 மாத குழந்தைக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பதிவாகியுள்ள முதல் HMPV வழக்கும் இதுவே. இரண்டு குழந்தைகளுக்கும் HMPV பாதிப்பு இருப்பதை ICMR உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் குடும்பத்தினர் எந்த பயண வரவாறு இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இருப்பினும், வைரஸின் தீவிரத்தன்மையை குறித்தும், சீனாவில் பரவும் வைரஸ் தான் இதுவா என்பது தெளிவாக தெரியாத நிலையில், ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு குறித்து மத்திய சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குழந்தையின் குடும்பத்தினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.