இது பழைய நோய் தான்.. ஆனால் எப்போது ஆபத்து தெரியுமா? HMPV பீதிக்கு மத்தியில் மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..
சீனாவில் HMPV என்ற வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இது அடுத்த பெருந்தொற்று நோயாக மாறுமா என்ற அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் HMPV வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் மக்களிடையே பீதியை பரப்பும் வகையில் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆனால் இந்த HMPV வைரஸ் அந்தளவு ஆபத்தானதா என்றால் இல்லை என்பதே பதில். இன்னும் சொல்ல போனால் இது கோவிட் 19 போல புதிய வைரஸ் அல்ல, HMPV என்பது ஒரு பழைய நோய் என்றும் நம்மில் பலர் 5 வயதிற்குள் வைரஸுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா உட்பட உலகளவில் HMPV ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது என்றும், மேலும் HMPV உடன் தொடர்புடைய சுவாச நோய்கள் பல்வேறு நாடுகளில் பதிவாகியுள்ளன என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி AIIMS மருத்துவமனையில் உள் மருத்துவத்திற்கான கூடுதல் பேராசிரியர் டாக்டர் நீரஜ் நிஷால் இதுகுறித்து பேசிய போது “HMPV வைரஸை கோவிட்-19 உடன் ஒப்பிட வேண்டாம், ஏனெனில் இது புதிய வைரஸ் இல்லை. HMPV பாதிப்பு 2001 முதலே இருந்து வருகிறது. 10 வயதிற்குள், பெரும்பாலான குழந்தைகள் இந்த வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறார்கள்.
HMPV பற்றிய இந்த எச்சரிக்கை அல்லது பீதி விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களிடையே அமைதியாகப் பரவி வருகிறது. மேலும் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பறவைகளிடமிருந்து மற்ற உயிரினங்களுக்குத் பரவியது என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இருக்கும் பொதுவான சுவாச நோய் கிருமிகளில் ஒன்றாக HMPV உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் இதன் பொதுவான அறிகுறியாகும். இருப்பினும், முதல் முறையாக வைரஸை எதிர்கொள்ளும் குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நபர்கள் மிகவும் கடுமையான அறிகுறிகளை அனுபவிக்கலாம்.” என்று தெரிவித்தார்.
2014 இல் PLOS ONE இல் வெளியிடப்பட்ட 10 ஆண்டுகால ஜெர்மனி ஆய்வில் HMPV உலகளவில் மிகவும் பொதுவான சுவாச நோய்க்கிருமிகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டது. கிட்டத்தட்ட அனைவருக்கும் 5 வயதிற்குள் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும். HMPV வைரஸ் பாதிக்கப்பட்ட 94% பேருக்கு இருமல் ஏற்படுகிறது என்று ஜெர்மன் தரவு தெரிவிக்கிறது. 88% பேர் காய்ச்சல் அல்லது நடுக்கம் ஏற்படுகிறது. நோய் தீவிரமாகும் போது அரிதான சூழலில் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியாவாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
"கடுமையான சுவாசக்குழாய் நோய்த்தொற்று என்பது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு நிரூபிக்கப்பட்ட தொற்று காரணமாகும், மேலும் இது புவியியல் ரீதியாகவும் பருவகால ரீதியாகவும் உலகம் முழுவதும் கணிசமாக வேறுபடுகிறது" என்று ILBS மற்றும் Max Healthcare இன் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுவாச வைரஸ் தொற்றுகளில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றுகள் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், HMPV உட்பட பிற இன்ஃப்ளூயன்ஸா அல்லாத வைரஸ்கள் சுவாச நோய்களுக்கான முதன்மை முகவர்களாக அதிகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV), parainfluenza வைரஸ், கொரோனா வைரஸ்கள் மற்றும் அடினோவைரஸ் ஆகியவை பொதுவான வைரஸ்களாக உள்ளதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவர் அண்ட் பிலியரி சயின்சஸின் முன்னணி வைராலஜிஸ்ட் மற்றும் ஆய்வறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் ஏக்தா குப்தா இதுகுறித்து பேசிய போது “ HMPV என்பது காய்ச்சல் வைரஸின் ஒரு பகுதியாகும் 2016 முதல் HMPV- ன் பாதிப்பை கண்டறிதல் விகிதம் அனைத்து மாதிரிகளிலும் சுமார் 10% ஆகும். இந்த எண்ணிக்கை தற்போது மாறவில்லை. இதில் அசாதாரண உயர்வு எதுவும் இல்லை." என்று தெரிவித்தார்.
மணிப்பால் மருத்துவமனையின் தொற்று நோய்களுக்கான ஆலோசகரான டாக்டர் அங்கிதா பைத்யா, இதுகுறித்து பேசிய போது “ இந்தியாவில் வைரஸ் பரவி உள்ளதால், பீதி அடையத் தேவையில்லை. சோதனை அதிகரித்திருப்பதால் இந்த எண்ணிக்கை நமக்கு அதிகமாக தோன்றலாம்.. நீண்ட காலமாக இந்தியாவில் HMPV வைரஸ் புழக்கத்தில் இருப்பதால், இன்னும் அதிகமான பாதிப்புகளைக் கண்டறியலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். ஆனால் அந்த சூழல் தற்போது இல்லை” என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆயத்தப் பயிற்சியானது, சுவாச நோய்களின் அதிகரிப்பைக் கையாளும் இந்தியாவின் வலுவான திறனை நிரூபித்துள்ளது. மேலும் வைரஸ் பரவல் அதிகரித்தாலும் அதனை சமாளிக்க பொது சுகாதாரத்துறை தயாராகவே உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
Read More : உலகை அச்சுறுத்தும் HMPV வைரஸ்!. பரவுவதைத் தடுக்க செய்ய வேண்டியவை!. செய்யக்கூடாதவை!.