HMPV வைரஸ்: நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் முகக்கவசம் கட்டாயம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சீனாவில் தற்போது HMPV வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இது அடுத்த பெருந்தொற்றாக மாறுமா என்ற கவலை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் HMPV பாதிப்பு இருப்பது உறுதியானது. இன்று மகாராஷ்டிராவில் 2 பேருக்கு HMPV பாதிப்பு உறுதியானதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
HMPV வைரஸ் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “இந்த வைரஸ் பாதிப்பு இருந்தால் 2 முதல் 3 நாட்களுக்கு இருமல் சளி பாதிப்பு இருக்கும். உடல் நலக்குறைவு இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். முகக்கவசம் அணிவது, இடைவெளி பின்பற்றுவது தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வைரஸ் பொருத்தவரை 2 நாட்களுக்குப் பிறகு அதுவே நீங்கிவிடும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவு சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதில்லை. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் தனிமைப்படுத்துவது சிகிச்சை தான்.
சேலம், சென்னையில் இருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் 65 வயதுமிக்க ஒரு நபருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு உடல் நலக் குறைவு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 45 வயது நபருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கும் உடல்நலக்குறைவு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த பாதிப்பு பொறுத்தவரை அதிகமான பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பொது வெளியில் செல்லும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். ஆனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 முறை கை கழுவினால் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 2 பேருக்கு ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கர்நாடக எல்லை அருகே நீலகிரி மாவட்டம் இருப்பதால், முகக்கவசம் அணிய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.