HMPV வைரஸ்..!! சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!! அமைச்சர் மா.சுப்புரமணியன் கொடுத்த பரபரப்பு விளக்கம்..!!
HMPV வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே. மணி, விஜயபாஸ்கர், வேல்முருகன் உள்ளிடோர் எச்எம்பிவி வைரஸ் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது.
இந்த வைரஸால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர். எச்எம்பிவி தொற்று குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. காய்ச்சல், சளி பாதிப்புள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. தொடர்ந்து வரும் வைரஸ் போன்று எச்எம்பிவி வைரஸும் சாதாரணமான ஒன்றுதான். மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு இது ஒன்றும் பெரிய பாதிப்பு கிடையாது” என்று விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் 10 பேர் பாதிப்பு..!!
சீனாவில் HMPV வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் சுகாதாரம் தொடர்பான கவலைகளை எழுப்பியுள்ளது. இந்தியாவில் பல HMPV பாதிப்புகள் உறுதியாகி வரும் நிலையில், நாட்டில் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. HMPV என்பது மேல் சுவாசக்குழாய் வைரஸ் ஆகும். இது ஜலதோஷம் அல்லது காய்ச்சலால் ஏற்படும் நோய்த்தொற்றுகளைக் கொண்டு வருகிறது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், இது கடுமையான நோயை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.