அதானியை கதிகலங்க வைத்த ஹிண்டன்பெர்க் ரிசர்ச் மூடல்!. திடீரென அறிவித்த நிறுவனர் நேட் ஆண்டர்சன்!. என்ன காரணம்!
Hindenburg Research: அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தவிட்டு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம், ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம், உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் இழப்பைச் சந்தித்தன.
86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதனால் அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதுடன், பணக்காரப் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்தது. மேலும், இவ்விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தவிட்டு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனர் நேட் ஆண்டர்சன் தனது எக்ஸ் தளத்தில், நிறுவனத்தை திடீரென மூட ஒரு குறிப்பிட்ட விஷயம் எதுவும் காரணமில்லை என்று குறிப்பிட்ட அவர், "அச்சுறுத்தல் இல்லை, உடல்நலப் பிரச்சினை இல்லை மற்றும் பெரிய தனிப்பட்ட பிரச்சினை இல்லை. இதற்காக நான் செய்யும் வேலை மிகக் கடினமாகவும் தீவிரமாகவும் இருக்கிறது. இதனால் உலகின் மற்ற பகுதிகள் மற்றும் நான் விரும்பும் நபர்களைச் சந்திக்க நேரமில்லாமல் போகிறது. ஹிண்டன்பர்க் என்பது என் வாழ்வின் ஒரு அத்தியாயம் தானே தவிர. அதுவே எனது வாழ்க்கை வரையறுக்கும் விஷயம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியானது அதானி குழுமத்தை குறிவைத்து 2023 ஆம் ஆண்டு முழுவதும் பல அறிக்கைகளை வெளியிட்டது. இதன் காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் பெரும் பகுதி அழிக்கப்பட்டது. பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் தீவிரத்தன்மை இருந்தபோதிலும், அதானி மற்றும் அவரது நிறுவனங்கள் தங்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகின்றன. இதுதொடர்பான பல வழக்குகளும் நிலுவயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.