'பக்தனுக்காக குடிகொண்ட முருகன்' வியக்க வைக்கும் பச்சைமலை முருகன் கோவில் வரலாறு..!!
நாம் பச்சைமலை முருகனை நோக்கி ஒருகரம் நீட்டினால் அவன் பன்னிரு கரம் நீட்டி நம்மை அரவணைத்துக் கொள்வான் என்கின்றனர் இந்த பகுதி மக்கள்…பச்சைமலை வெறும் பாறைகளும், கற்களும் நிறைந்த சிறு குன்றே ஆகும். இங்கு பச்சை என்பது நீரூற்றை குறிக்கிறது. இங்கு மலைக்குக் கீழ், மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது.
முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் கொங்கு நாட்டிற்கு வந்தபோது, சிவபூஜை செய்ய சரியான இடம் என்று கோபி அருகே உள்ள மொடச்சூரைத் தேர்ந்தெடுத்ததாகவும்,அப் போது அவரது மனம் இச்சைகளைத் தீர்க்கும் முருகனைக் காண ஏங்குகியதாகவும், அவனை எண்ணி தவம் செய்தார். அப்போது, முனிவரே உமது சிவபூஜையால் மகிழ்ந்தோம். எங்கள் இளைய குமாரன் இங்கிருந்து அரை காத தூரத்தில் மரகதவள்ளி என்ற தன் தாயின் நிறம் கொண்ட குன்றின் மேல் அருள்கிறார். நீ அந்த மரகத கிரிக்குச் சென்று மேற்கு நோக்கி உள்ள இளம்குமரக் கடவுளைக் கண்டு தொழுது உனது பெயரால் ஒரு சக்கரம் ஸ்தாபித்து பூஜிப்பாயாக என வானில் இருந்து அசரீரி குரல் கேட்டது.
அதன்படி அங்கு சென்று குழந்தை வடிவில் முருகப்பெருமான் இருக்கக்கண்டு பேரானந்தம் அடைந்து மானசீகமாக பூஜை செய்தார். பின் இறைவனை மனதில் நிறுத்தி தவம் மேற்கொண்டார். நாக வடிவில் இறைவன் முனிவர் முன் தோன்றி, உமக்கு யாது வரம் வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு முனிவர், இறைவா நான் பூஜித்த இக்குன்று மரகதகிரி எனப் பெயர் பெற வேண்டும். தாங்கள் இளம் குமரனாக குழந்தை வடிவில் எழுந்தருளி அடியார்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும்.
நான் அமைத்த சக்கரம் என்றும் பிரகாசமாக இருக்க வேண்டும். மந்திரம் எந்திரம், மூர்த்தி, சானித்யம் சூரிய சந்திரன் உள்ளவரை இம்மலை சானித்யமாய் விளங்க வரமளிக்க வேண்டும் என வேண்டினார். அவ்வாறே ஆகுக. கலியுகத்திலும் இம்மலையில் பல திருவிளையாடல்கள் செய்து அடியார் தம் குறைகளை தீர்த்தருள அனுக்கிரகம் செய்வோம் எனக்கூறி நாகம் மறைந்தது.
இந்த கோவிலில் பிரசாதமாக தினைமாவும், ஞானப்பாலும் வழங்கப்படுகிறது. தைப்பூசத்தன்று பக்தர்கள் காவடியும், பால்குடமும் எடுத்து வரும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும் என்கின்றனர் மலைமீது செல்ல பாதையும், நூற்று எண்பது படிகளும் உள்ளன. படிப்பாதை முடிவில் உள்ள நாற்பது அடி உயரமுள்ள திருச்செந்தூர் முருகனின் ஞானத் திருக்கோலம் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் எழிலாக அமைந்துள்ளது.இது குட்டி மலேசியா சிலை போல அமைந்துள்ளது.