கடும் பனி..!! நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தபோது விபரீதம்..!! குடும்பமே மயங்கி கிடந்ததால் அதிர்ச்சி..!! ஒருவர் மூச்சுத்திணறி பலி..!!
தமிழ்நாட்டில் கடந்தாண்டு இறுதியில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள் மழை வெள்ளத்தால் தண்ணீர் தேங்கியுள்ளன. இதனால், வழக்கத்தை விட இந்தாண்டு அதிக அளவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. பனி பொழிவு அதிகரிப்பால் மரங்கள், செடி, கொடிகளில் பனிகள் படர்ந்து வெள்ளை நிறத்தில் முத்துக்கள் போல காட்சி அளிக்கிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இத்தலார் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருக்கு வயது 34. இவர், நேற்று முன்தினம் இரவு கடும் குளிர் காரணமாக நெருப்பு மூட்டி உள்ளார். அப்போது, வீட்டில் அவருடைய மனைவி புவனா (28), நான்கு வயது மகள் தியாஸ்ரீ மற்றும் உறவினர்கள் சாந்தா (59), ஈஸ்வரி (57) ஆகியோர் இருந்துள்ளனர்.
நேற்று காலை வீட்டில் இருந்து புகை வந்து உள்ளதை அக்கம்பக்கத்தினர் பார்த்து கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, வீட்டிற்குள் இருந்த 5 பேரும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர்களை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜெயபிரகாஷ் மட்டும் ஏற்கனவே இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், மயக்கத்தில் இருந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.