மீண்டும் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட வரும் கனமழை..!! இந்த தேதிகளில் சம்பவம் இருக்கு..!!
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டது. நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. தற்போது, இந்த மாவட்டங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, "தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக டிசம்பர் 7ஆம் தேதியான நாளை, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
எனவே, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் வரும் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 11ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.