நாளை உருவாகும் புயல்...! தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை...!
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா - மேற்கு வங்க கடற்கரையை 24-ம் தேதி நெருங்கும்.
தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், கர்நாடகா, அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 24 முதல் 27-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.