”முதன்மைக் கண்ணோட்டத்தில் அவர் குற்றவாளி அல்ல”..!! முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை கையகப்படுத்தியதாக ஹேமந்த சோரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரன், ஐஏஎஸ் அதிகாரியும் ராஞ்சி முன்னாள் துணை ஆணையருமான சாவி ரஞ்சன், பானு பிரதாப் பிரசாத் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கைக்கு முன்பு அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதைத்தொடர்ந்து சம்பாய் சோரன் ஜார்கண்ட் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
தனக்கு எதிரான நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த ஹேமந்த் சோரன், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் தன் மீது சுமத்தப்பட்டதாக கூறினார். மேலும், ஜாமீன் கோரி ஹேமந்த சோரன் தாக்கல் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, கடந்த மாதம் இடைக்கால ஜாமீன் கோரி அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால், உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் நிலமோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது ஜார்கண்ட் மாநில தலைநகரில் 8.86 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. சட்ட விரோதமான நில பேரத்தில் ஹேமந்த் சோரன் ஈடுபட்டதை சாட்சிகள் உறுதி செய்துள்ளதாகவும் கூறியது.
ஆனால் அரசியல் பழிவாங்கும் நோக்கில் புனையப்பட்ட வழக்கு என்று ஹேமந்த் சோரன் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து வாதங்களை கேட்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. முதன்மைக் கண்ணோட்டத்தில் அவர் குற்றவாளி அல்ல என்றும், ஜாமீனில் இருக்கும்போது மனுதாரர் குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Read More : TVK Vijay | டாப் 10 மாணவிகளுக்கு விலையுயர்ந்த பரிசை வழங்கிய விஜய்..!! என்ன தெரியுமா..?