செந்தில் பாலாஜிக்கு ஏன் மீண்டும் அமைச்சர் பதவி...? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்...!
மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பவள விழாவை கொண்டாடும் திமுக, தமிழகத்தை 6-வது முறையாக ஆட்சி செய்து வருகிறது. இன்று நாட்டிலேயே 2-வது பெரியபொருளாதார மாநிலமாக தமிழகம்உள்ளது. மாநில வளர்ச்சியின் குறியீடுகளாக உள்ள அனைத்திலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சமூகநீதி சிந்தனையோடு, தமிழகத்தின் வளர்ச்சியை ஜனநாயகப்படுத்தி விளிம்புநிலை மக்கள், ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை உருவாக்கியுள்ளோம். அரசும், பொறுப்பும், தலைமையும், முதல்வரின் செயல்களும் கூட்டுப் பொறுப்பு என்பதை உணர்ந்தவன் நான். அதன்படியே செயல்படுபவன். மூன்றாண்டு வளர்ச்சிக்கு தமிழக அமைச்சர்கள் அனைவரும் பங்களித்துள்ளனர். இதன் இன்னொரு கட்டமாகவே துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வரான எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக அவர் இருக்கப் போகிறார். தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டுத் துறையின் மூலம் இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல, உலகின் கவனத்தை ஈர்த்தவர் உதயநிதி. அதேபோல, தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை மிக உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறார். நாள்தோறும் கண்காணித்து அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றிக் காட்டி வருகிறார். திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்து இளைஞர்களை ஈர்த்தும், அவர்களை திராவிடக் கொள்கை கொண்டவர்களாக கூர் தீட்டியும் வருகிறார்.
அவரது செயல்பாடுகள் கட்சி வளர்ச்சிக்கும், ஆட்சித் திறன் மூலமாக தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னிலும் கூடுதலான உழைப்பை அவர் செலுத்த வேண்டும். திமுகதொண்டர்களின் உள்ளக் கிடக்கையையும் உணர்வையும் புரிந்துகொண்டு, அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் செயலாற்ற வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது தியாகத்தை நான் வாழ்த்தியதை சிலரால் பொறுக்க இயலவில்லை. அவரை வைத்து திமுகவுக்கு எதிரான சதிச்செயல்களை செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். இளைஞர் அணி காலம்தொட்டு என்னுடன் களப்பணியாற்றியவர்கள் சேலம் ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர். மாணவப் பருவம் முதலே திராவிடக் கொள்கையில் ஊறி அடிமட்டத் தொண்டராக திமுகவுக்கு உழைத்த கோவி.செழியனும் அமைச்சர் பொறுப்பேற்கிறார். புதிய அமைச்சர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.