HBD Harris Jayaraj!. 'நெஞ்சைப் பூப்போல் கொய்தவளே'!. மெலோடி கிங்; ரிங்டோன் நாயகன் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தநாள் இன்று!.
HBD Harris Jayaraj: தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். 2001ம் ஆண்டு வெளியான 'மின்னலே' படத்தின் மூலம் இவர் திரைத்துறைக்குள் நுழைந்தார். தனது திறமையால் பல பிலிம்பேர் விருதுகளை இவர் வென்று குவித்து இருக்கிறார். தமிழ் ரசிகர்கள் அதிகம் கேட்ட பாடல்களின் ப்ளேலிஸ்ட்களில் இவரது பாடல்களுக்கென தனி இடம் உண்டு. ப்ளேலிஸ்ட்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் மனதை இசையால் வேட்டையாடி விளையாடியவர், அவரே ஹாரிஸ் ஜெயராஜ்!
1992ம் ஆண்டு தொடங்கி 2000ம் ஆண்டு வரை ஃபிலிம்ஃபேர் விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவே தனியாக எடுத்துவைக்கப்பட்டிருக்கும். காரணம் 9 ஆண்டுகள் அந்த விருதை தனதாக்கிக்கொண்டிருந்தவர் ரஹ்மான். 2001ம் ஆண்டு அது. அந்த ஆண்டும் ரஹ்மான் தான் என நினைத்திருந்தார்கள். அங்கே ஒரு ட்விஸ்ட். 'தி அவார்ட் கோஸ்ட் டூ' என புதிய இசையமைப்பாளரின் பெயர் உச்சரிக்கப்பட்டது. எல்லோரும் திரும்பி பார்க்க இசையால் நடையை கட்டி வந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். முதல் படமான மின்னலே படத்திற்காக அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
ரோஜா படத்தில் தடம் பதித்த ரஹ்மானைப்போல, தனது முதல் படமான மின்னலே வெளியானதில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹாரிஸின் பெரும்பாலான பாடல்களே ரிங்டோன்களாகவும், காலர் ட்யூன்களாகவும் செல்போன் புரட்சியில் பங்கெடுத்தன. 'நான் பெங்களூர் பேசுறேன்.. ராஜேஸ்ல இருந்து' என மாதவன் உளறிக்கொண்டு ரீமாசனை மதிமயங்கி பார்த்துக்கொண்டிருப்பார். ரீமாசன் மழை நீரை காலால் உதைக்கும்போது, ஹாரிஸின் இசை சாரல் காதுகளில் தெறிக்கும். 'பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்' என்ற வரிகளுக்கிடையில் இசையால் நம் மனதை கொய்திருப்பார். அந்த ரிங்டோன்களை இப்போதும் ஆங்காங்கே கேட்க முடியும். அதில், ’ஜூன் போனால் ஜூலை காற்றே’ அப்போதே வைரல் ரகம்!. மின்னலே படத்தில் தொடங்கி, மஜ்னு, லேசா லேசா, காக்க காக்க, கஜினி, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம், அயன், எங்கேயும் காதல் என 2001-ல் இருந்து 2010-ம் ஆண்டு வரையிலான காலம் ஹாரிஸின் கோல்டன் பீரியட்.
அவரது ஆரம்பகால பாடல்களை எடுத்துக்கொண்டால் தெளிந்த நீரோடையைப்போல அப்படியிருக்கும். 'சாமுராய்', 'லேசா லேசா', 'உள்ளம் கேட்குமே' படங்களின் மூலம் 'மெலடி கிங்' ஆக உருவெடுத்தார் ஹாரிஸ். லேசா லேசா பாடல் கேட்கும்போது மனம் பஞ்சுபோல லேசாகி பறந்து கொண்டிருக்கும்போது, அடுத்த வரிகளில் 'நீயில்லாமல் வாழ்வது லேசா' என தனது இசையில்லாமல் வாழ முடியாது என்பதை குறியீடு மூலம் உணர்த்தியிருப்பார்.
இதமான சூட்டில் கண்களை மூடிக்கொண்டு கேட்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர் அவர். 'மூங்கில் காடுகளே' பாடலை நீங்கள் எங்கிருந்து கேட்டாலும், பொழியும் பனிக்கு நடுவே, மூங்கில் காடுகளுக்கு அருகில் நின்று கேட்பதைபோன்ற உணர்வை கொடுக்கும் மாஜிக் ஹாரிஸூடையது. 'காக்க காக்க' 'செல்லமே' படங்களில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவரிடமிருந்து அந்நியனும், வேட்டையாடு விளையாடுவும், தீம் மியூசிக்கின் கனமான அவுட்புட்டை பெற்று தந்தன. ''வேட்டையாடு விளையாடு' கமல் இன்ட்ரோ சாங் மாதிரி ஒன்னு போடுங்க' என ஹீரோக்கள் கேட்கும் அளவிற்கு தெறிக்கவிட்டிருப்பார். அந்நியனிலும் கேரக்டருக்கு தகுந்தாற்போல தனிதனி தீம் மியூசிக் அமைத்து தனது தனித்தன்மையை காட்டியிருப்பார்.
உன்னாலே உன்னாலே, தாம் தூம் படங்களில் ஜீவாவுடனான ஹாரிஸின் இணைவு அட்டகாசபடுத்தியிருக்கும். ஜூன் போனால்", "யாரோ மனதிலே" பாடல்கள் ஆத்மாவின் வருடல்கள். ‘மின்னலே’ தொடங்கி ‘வாரணம் ஆயிரம்’ வரை தொடர்ந்த இந்தக் கூட்டணி, அதன் பிறகு ஏற்பட்ட ஒரு சிறு மனஸ்தாபத்தால் பிரிந்தாலும் மீண்டும் 2015இல் வெளியான ’என்னை அறிந்தால்’ படத்தில் மீண்டும் இணைந்தது. அந்தப் படத்தில் ‘மழை வரப் போகுதே’ உள்ளிட்ட அருமையான பாடல்கள் அமைந்தன. ’அயன்’, கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ உள்ளிட்ட கே.வி.ஆனந்த் படங்களிலும் பல சிறப்பான பாடல்கள் கிடைத்துள்ளன.
ஹாரிஸ் - கெளதம் வாசுதேவ், ஹாரிஸ் - கார்த்திக், ஹாரிஸ் - தாமரை, ஹாரிஸ் - ஹரிஹரன் என நிறைய காம்போக்கள் ஹிட் அடித்திருக்கின்றன. ஆனால், ஹாரிஸ் - ஜீவா காம்போ மறக்க முடியாத ஒன்று! ஹாரிஸின் இசை பயணம் ‘peak’ல் இருந்தபோது அவர் ஜீவாவோடு பணியாற்றி இசையமைத்த ஆல்பங்கள் தனித்துவமாக இருக்கும். இந்த காம்போ இன்னும் சில படங்களுக்கு நீடித்திருந்தால், வேற லெவல் பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திற்கும். இளையராஜா காலம், ஏ.ஆர் ரஹ்மான் காலமென்று இருக்குமெனில், நிச்சயம் ஹாரிஸ் காலம் என சொல்லும்படியான ஒரு இசை காலத்தை தனக்கென உருவாக்கி கொண்டு, ரசிகர்களின் மனதில் தனி இடம் பெற்றிருக்கிறார் என்பதை தவிர்க்க முடியாது!. இந்தநிலையில் அவர் இன்று 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.