புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? உங்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!
மக்களவை தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதன் காரணமாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்க போகிறது என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் உள்ளன. மானிய விலையிலும், விலையில்லாமலும் அரிசி சர்க்கரை, பருப்புகள், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு என்பது வெறும் பொருட்கள் வாங்க பயன்படும் அட்டையாக மட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கான அட்டையாகவும் உள்ளது. மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கு முன்பு அனைத்து ரேஷன் கார்டுகளும் ஆதார் உடன் இணைக்கப்பட்டது.
குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளதால், குடும்பத்தில் உள்ள யார் வாகனம் வாங்கினாலும் சரி, பெரிய இடம் வாங்கினாலும் சரி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் இருந்தாலும் சரி ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தின் வருமானம் எவ்வளவு என்பதை அரசால் எளிதாக அறிய முடியும். அதை அடிப்படையாக வைத்து தான் மகளிர் உரிமை தொகை ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கிடையே, ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே உரிமை தொகை வழங்கப்படுவதால், புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு அதிகமானது.
அதாவது ஒரு குடும்பத்தில் இருக்கும் மாமியார், மருமகள் இருவரும் மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டும் என்பதற்காக ஒரே வீட்டில் இருந்தாலும், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்கள். 2022இல் 2 கோடியே 20 லட்சம் ஆக இருந்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டாக நிறுத்திவைக்கப்பட்ட காரணத்தால் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் என்ற நிலையில் உள்ளது. இதற்கிடையே, உரிமைத்தொகை திட்டம் காரணமாக குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுக்கு பலரும் விண்ணப்பிக்க தொடங்கினர்.
அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடந்தது. கடந்த ஓராண்டில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கு பல மாதங்களாக கார்டுகள் வழங்கப்படாத நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதம் முன்புதான் ஸ்மார்ட் கார்டு ஒப்புதல் ஆகிவிட்டது என்ற குறுஞ்செய்தி சிலருக்கு வந்தது. ஆனால், தேர்தல் காரணமாக அவர்களுக்கு கார்டுகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் ஜூன் மாதம் 5ஆம் தேதி விலக்கி கொள்ளப்பட்ட பின்பு அனைத்து மாவட்டங்களிலும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக விண்ணப்பித்துள்ள 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கும் புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஜூன் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு தடையின்றி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம். அல்லது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், நகல் ஸ்மார்ட் கார்டு, கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளையும் மிக எளிதாக செய்யலாம். ஜூன் மாதம் முதல் உடனுக்குடன் அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவு..!! நிறுவனமே ஒப்புக்கொண்டதால் அதிர்ச்சி..!!