பாஜகவில் இணைந்தாரா ஓபிஎஸ்?… காவி வேட்டியில் பேரவைக்கு வந்து ட்விஸ்ட்!… தமிழக அரசியலில் பரபரப்பு!
பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாத மசோதாக்கள் தொடர்பாக தனித் தீர்மானங்களும் அவையில் நிறைவேற்றப்பட்டன. சட்டமன்ற விவகாரம் இப்படி ஒருபுறம் இருக்க, முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் எனும் கேள்வி இருந்து வந்தது. அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்துவது தொடர்பாக வழக்கும் நடந்து வருவதால் சட்டமன்றத்துக்கு அவர் என்ன உடை அணிந்து வருவார் எனவும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்தநிலையில், நேற்று சட்டமன்றத்துக்கு காரில் வந்திறங்கிய ஓபிஎஸ், வெள்ளைச் சட்டை அணிந்து வந்திருந்தார். ஆனால் ஒரு ட்விஸ்ட்டாக வழக்கமான வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி நிற வேட்டி அணிந்து வந்திருந்தார். கட்சி கொடி தொடர்பாக வழக்கு நடந்து வருவதால், சிக்கலைத் தவிர்க்கும் விதமாக அவர் காவி உடையில் வந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனவும் பலரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதேபோல வழக்கமான அதிமுக கொடியையும் தனது காரில் அவர் பயன்படுத்தவில்லை. மாறாக வெள்ளை, சிவப்பு, கறுப்பு வண்ணங்களை காரின் முகப்பில் இடம்பெறச் செய்திருந்தார். பின்னர் சட்டமன்றத்துக்கு உள்ளே நுழைந்த ஓ.பி.எஸ், அதிமுக பொதுச் செயலாளர் ஈ.பி.எஸ் அருகில் அமர்ந்து அவை நடவடிக்கைகளைக் கவனித்தார். தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய நிலையில், முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ் ஆதரவும் தெரிவித்தார்.