Harsh Vardhan | ’தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லை’..!! அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு..!!
டெல்லி யூனியன் பிரதேச பாஜகவின் மூத்த தலைவரான ஹர்ஷ் வர்தன் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார். மத்திய சுகாதாரத் துறை மற்றும் அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2021இல் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் ஹர்ஷ் வர்தனின் சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளராக பிரவீன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகுவதாக ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ”கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 5 முறை எம்எல்ஏஆகவும் 2 முறை எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.
கட்சி மற்றும் அரசுப் பணிகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளேன். தற்போது மீண்டும் எனது இருப்பிடத்திற்கு செல்கிறேன். ஏழைகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக எம்பிபிஎஸ் படித்தேன். ஆர்எஸ்எஸ் தலைமையின் வழிகாட்டுதலால் தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவையாற்றினேன். வறுமை, நோய், அறியாமைக்கு எதிராகப் போராடினேன். டெல்லி சுகாதாரத் துறை அமைச்சராகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றினேன். எனது காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை டெல்லி கிருஷ்ணா நகரில் இருக்கிறது. அந்த மருத்துவமனைக்கு திரும்பி செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : தாமரை சின்னத்திற்கு எதிராக வழக்கு..!! சீமானுக்கு பதிலடி கொடுத்த Annamalai..!!