சென்னை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இன்னைக்கு மழை இருக்காம்! வெதர்மேன் கொடுத்த நச் அப்டேட்
சென்னையில் இன்று மழை பெய்யும் என்பதால் ரெயின் கோட்டை கொண்டு செல்ல மறக்காதீர்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள், சென்னைக்கு நல்ல நாளாக அமைய போகிறது. டெல்டா மாவட்டங்கள், கரூர்- நாமக்கல் பெல்ட், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் ரெயின் கோட்டையும் குடையையும் கொண்டு செல்ல மறவாதீர்கள் என வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. சென்னையில் கூட கடந்த இரண்டு, மூன்று தினங்களாக காலையில் வெயில் குறைந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மே 4 ஆம் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கியது. இது வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும். கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான வெப்பம் வாட்டி எடுத்தது. தமிழகத்தில் ஈரோடு, கரூர், திருத்தணி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தது.
இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். வெப்ப வாதத்தில் சிலர் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஊட்டிக்கு செல்லலாம் என இருந்தால் அங்கும் 78 ஆண்டுகளுக்கு பிறகு வெயில் வாட்டியது. இதனால் ஊட்டி சென்ற சுற்றுலா பயணிகளும் வெயிலில் வாடினர். இந்த நிலையில் வேலூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து மக்களின் மனமும் குளிர்ந்தது. அது போல் தென்காசி, நெல்லை, கோவை, விருதுநகர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அது போல் உள்மாவட்டங்களான திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது, "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். மேலும் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், 18-ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 - 37.4 டிகிரி பாரன்ஹீட் வரை படிப்படியாக குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 முதல் 98.6 டிகிரியை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 முதல் 84.2 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: CAA சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கியது மத்திய அரசு!