மீண்டும் அச்சுறுத்தும் H5N1 வைரஸ்..!! இந்தியாவுக்கு ஆபத்தா..? அறிகுறிகள் இதுதான்..!! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்..!!
உலகம் முழுவதும் H5N1 பறவைக் காய்ச்சல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு காய்ச்சல், கண்சவ்வு அழற்சி ஏற்பட்டதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா இந்த தொற்றுநோயின் ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது, 67 பாதிப்புகளில் 38 பாதிப்புகள் பாதிக்கப்பட்ட கோழி மற்றும் பால் மாடுகளுடன் தொடர்புடையவை ஆகும்.
இந்தியாவுக்கும் ஆபத்தா..?
இந்தியாவில் பறவைக்காய்ச்சல் தொற்றுநோய் பரவ அதிக வாய்ப்புள்ள கூறப்படுகிறது. ஏனென்றால், இங்கு அதிகளவிலான கோழிப்பண்ணைகள், ஈர நிலங்கள், புலம்பெயர்ந்த பறவைகள் உள்ளன. அதன்படி, H5N1 வைரஸ் முதன்முதலில் இந்தியாவில் மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், மேற்கு வங்கம், ஒடிசாவில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நாட்டில் இருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், நாக்பூர் மீட்பு மையத்தில் H5N1 நோயால் பாதிக்கப்பட்ட 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
H5N1 நோய்த்தொற்றின் அறிகுறிகள் என்ன..?
* காய்ச்சல்
* தசை வலி
* மூச்சுத்திணறல்
* இருமல் மற்றும் தொண்டை வலி
* கடுமையான சுவாசக் கோளாறு
* கண்களில் எரிச்சல் அல்லது சிவப்பு நிற கண்கள்
* சில சந்தர்ப்பங்களில் நிமோனியா அல்லது பல உறுப்பு செயலிழப்பு போன்ற சிக்கல்கள் உருவாகலாம்
எப்படி தடுப்பது..?
* பறவைகளுடனான தொடர்பை தவிர்க்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் மற்றும் மாசுபட்ட சூழல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
* சமைக்கும்போது, கோழிகளை நன்கு சமைக்க வேண்டும். வைரஸ்களை அகற்ற கோழி மற்றும் முட்டைகளை முறையாக சமைத்து சாப்பிட வேண்டும்.
* அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். பறவை எச்சங்களுக்கு ஆளாகக்கூடிய மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
* பறவைகளுடன் தொடர்பு கொண்ட பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.
இந்த பறவைக்காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மனிதனுக்கு பரவுவது அரிதான விஷயமாக இருந்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த பெரிய வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொது விழிப்புணர்வு மற்றும் வலுப்படுத்தப்பட்ட சுகாதார அமைப்புகள் அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.