பெரும் சோகம்..!! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெண் விஞ்ஞானி உயிரிழப்பு..!! தந்தையை தேடும் பணி தீவிரம்..!!
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து காரில் சென்றுக் கொண்டிருந்த இளம்பெண் விஞ்ஞானி அஸ்வினி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ICAR என்றழைக்கப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்து வந்தவர் அஸ்வினி. இவரும், அவரது தந்தையும் சத்தீஸ்கரில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது மஹபூபாபாத் மாவட்டம் புருஷோத்தமய குடேமில் உள்ள அகுரு ஓடையின் பாலத்தில் இவர்களது கார் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக, இவர்களின் கார் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. அந்த இறுதி நேரத்தில் அஸ்வினியும், அவரது தந்தையும் உறவினர்களை தொலைபேசியில் அழைத்து, தங்களது காரில் தண்ணீர் நிறைந்து வருவதாகவும், எங்களால் காரை விட்டு வெளியேற முடியாத சூழல் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர் தான் இவர்கள் காரில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட விவரம் தெரியவந்து, இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அந்த பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அஸ்வினியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது தந்தையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இளம்பெண் விஞ்ஞானி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.