4 நாட்கள் தீபாவளி விடுமுறை? முதலமைச்சருக்கு பறந்த கடிதம்.. கருணை காட்டுமா தமிழக அரசு?
அக்டோபர் 31 ஆம் தேதி வியாழன் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளது. இந்த ஆண்டு வியாழன் கிழமை தீபாவளிப் பண்டிகை வருவதால் ஒரு நாள் மட்டுமே விடுமுறை கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவதில் மந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே தீபாவளிக்கு அடுத்த வெள்ளிக் கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை தீபாவளி பண்டிகை அன்று மட்டும் தான் அரசு விடுமுறை. தீபாவளிக்கு மறுநாள் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1-ந் தேதி விடுமுறை அறிவிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியதாவது, "தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு வருகிற 31-ந் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்த மறுநாள் நவம்பர் 1-ந் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. நவம்பர் 2 மற்றும் 3-ந் தேதி முறையே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு விடுமுறை நாட்களாக உள்ளது.
எனவே, நவம்பர் 1-ந் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறையை அரசு அறிவித்தால் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதனால், தீபாவளி பண்டிகையை நல்லமுறையில் கொண்டாடிவிட்டு, சொந்த ஊரில் 2 நாட்களை தனது குடும்பத்துடன் தங்கி இருந்து கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதோடு, பண்டிகை முடிந்து பணிபுரியும் இடத்திற்கு மீண்டும் செல்ல பஸ் வசதியும் எளிதாக கிடைக்கும். ஆகவே, நவம்பர் 1-ந் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுகிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசுப் பணியாளர்களின் கோரிக்கை குறித்து அரசுத்துறை அதிகாரிகள் விரைவில் ஆலோசனை மேற்கொண்டு மாணவர்களுக்கு சாதகமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோரிக்கையை ஏற்று வெள்ளிக் கிழமை விடுமுறை அளிக்கும் பட்சத்தில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
Read more ; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… தமிழ்நாடு அரசில் நூலகர் வேலை..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..