ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! இனி இவர்களுக்கு எந்த தடங்கலும் வராது..!! இவர் சொன்னதை கவனிச்சீங்களா..?
தமிழ்நாட்டில் பண்டிகை காலம் துவங்கிவிட்ட நிலையில், ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்புகள் தட்டுப்பாடின்றி இருந்து வருகின்றன. அதனால்தான், ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணியும் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அதேபோல, தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் ரேஷன் கடையில் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடுகள் இல்லாதவாறு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பருவமழையும் துவங்கிவிட்டதால், இதை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பழனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்தார். பாமாயில் , சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பையும் கேட்டறிந்தார். பின்னர், ரேஷன் கடைகளுக்கு தேவைக்கேற்ப பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் மழைக்காலம் துவங்கி விட்டதால் நியாய விலை கடைகளில் தட்டுப்பாடு இன்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் 37,000 ரேஷன் கடைகளில் 6000 கடைகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது, ஆண்டுக்கு 10,000 கடைகள் கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த நியாய விலை கடையில் வேண்டுமானாலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். அதற்கேற்றவாறு, பொருட்கள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சில நியாய விலைக் கடைகளில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த நபர்கள் பொருட்களை வாங்க செல்லும்போது தடங்கல் இருப்பதாக கூறப்பட்டது. அதையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதற்கிடையே, புதிய ரேஷன் கார்டு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. புதிய அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்கள் https://www.tnpds.gov.in/ என்ற உணவு பொருட்கள் வழங்கல் துறையின் இணையதள பக்கத்திற்கு சென்று புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பிக்கலாம். புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற காலத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் குடும்ப தலைவர், உறவினர்கள், இருப்பிட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.